ஹிம்மத் நகர்:

மூளை வளர்ச்சி குன்றிய தன் மகனுக்கு, மணமகளே இல்லாமல் ஆடம்பர திருமணத்தை நடத்தி ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் தந்தை.


குஜராத் மாநிலம் ஹிம்மத் நகரில், அஜய் என்ற 27 வயது இளைஞருக்கு ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது.

இசை கச்சேரி, பாரம்பரிய சடங்குகள் என அசத்தியிருக்கிறார்கள். ஆனால் மணமகள் மட்டும் கிடையாது.

இந்த திருமண வைபோகத்தில் 800 பேர் கலந்து கொண்டுள்ளனர்.  பாரம்பரிய குதிரை சவாரியும் நடைபெற்றது. மணமகன் அஜய்யை குதிரையில் உட்கார வைத்து ஊர்வலமாக செல்ல, இதில் 200 பேர் பங்கேற்றனர்.

பாரம்பரிய உடை, தலைப்பாகையுடன் அன்றையதினம் முழுவதும் அஜய் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார்.

அஜய்யின் தந்தை விஷ்று பரோட் கூறும்போது, என் மகனுக்கு மூளை வளர்ச்சியடையவில்லை. சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்டான்.
மற்றவர்கள் திருமணத்திலும் ஊர்வலத்திலும் ஆர்வமாக கலந்து கொள்வான். எனக்கு எப்போது திருமணம் ஆகும் என்று அடிக்கடி கேட்பான்.

அவனுக்கு மணமகள் கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் மணமகள் இல்லாமலேயே அஜய்க்கு திருமணம் நடத்துவது என்று முடிவு செய்தோம்.
அவனது கனவு நிறைவேறியிருக்கிறது.

இந்த சமுதாயம் என்ன சொல்லும் என்று யோசிக்காமல், என் மகனின் ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

அஜய்யின் சித்தப்பா கமலேஷ் பரோட் கூறும்போது, அஜய்க்கு இசை, நடனம் அதிகம் பிடிக்கும். அவன் முகத்தில் புன்சிரிப்பு வந்துவிடும்.
என் மகனுக்கு திருமணம் முடிந்ததும், தன் திருமணம் எப்போது என்று கேட்க ஆரம்பித்தான்.
இதனையடுத்து, மணமகளே இல்லாமல் அவனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தோம்.
உறவினர்களுக்கு எல்லாம் திருமண பத்திரிக்கை கொடுத்தோம். அன்றையதினம் அஜய் பெரு மகிழ்ச்சியுடன் இருந்தான் என்றார்.

அஜய்யின் தங்கை கூறும்போது, அண்ணனுக்கு திருமணம் நடந்ததால் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அஜய் எங்களுக்கு மிகவும் அன்பானவர் என்றார்.