Random image

களைகட்டும் முகநூல் மீம்கள் – எதையும் தாங்கும் இதயம் கே.எல்.ராகுல்..!

சமீப ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்துவகை ஃபார்மேட்களிலும் மிகவும் கவனிக்கப்படும் மற்றும் புகழத்தக்க ஒரு வீரராக உருவாகியுள்ளார் கர்நாடகத்தின் கே.எல்.ராகுல்.

ஆனால், வெறுமனே பெர்ஃபார்மன்ஸ் என்பதையும் தாண்டி, தனித்துக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு ஸ்பெஷலான வீரர் இவர்!

தன்னை எப்படிப் பயன்படுத்திக் கொண்டாலும், தான் சிறப்பாகவே பயன்படுவேன் என்பதாக இருக்கிறது இவரின் ஆட்டங்கள்.

இவரை துவக்க வீரர் என்ற நிலையிலிருந்து, ஆறாம் நிலை வீரர் என்ற வரிசைவரை களமிறக்கிப் பார்த்துவிட்டார்கள். ஆனால், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. பின்வாங்குவதும் இல்லை. தன்னால், எந்தளவிற்கு முடியுமோ, அந்தளவிற்கு ஒரு காட்டு காட்டி விடுகிறார்.

வெறுமனே பேட்டிங் மட்டுமா..? விக்கெட் கீப்பிங்கிலும் கலக்கி வருகிறார் ராகுல். ரிஷப் பன்ட்டைப்போல் கீப்பிங்கில் சொதப்பாத இவர், தொடர்ந்து 50 ஓவர்கள் கீப்பிங் செய்தாலும், சிறிய இடைவெளியில், உடனே, சளைக்காமல் ஓபனிங் இறங்கி விடுகிறார். இந்த ஒரு விஷயம் பலரையும் மூக்கின் மேல் விரலைக் கொண்டுபோக வைத்துவிடுகிறது!

ஆஸ்திரேலியாவுடன் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 5வது வீரராக மாற்றி இறக்கப்பட்ட ராகுல், அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.

மாறாக, 52 பந்துகளில் 80 ரன்களை விளாசி, ஆஸ்திரேலியர்களை டென்ஷனாக்கி, இந்தியாவின் எண்ணிக்கை 340 என்பதாக உயர்வதற்கு காரணமானார். அப்போட்டியில், அவர் எதிர்பாராமல் ரன் அவுட் ஆனதால், ஆஸ்திரேலியா அதோடு தப்பித்தது எனலாம்.

நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில், துவக்க வீரராக இறங்கி, 203 என்பதெல்லாம் பெரிய இலக்கா..! என்று கேட்பதுபோல் அடித்து நொறுக்கினார் ராகுல்.

மொத்தம் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உதவியுடன், 27 பந்துகளில் 56 ரன்களை இவர் எடுத்த விதம், மற்ற வீரர்களுக்கும் சளைக்காத ஊக்கத்தை அளித்தது. அடுத்து, இவரின் அதே ஸ்டைலைப் பின்பற்றினார் ஷ்ரேயாஸ்.

இப்படியெல்லாம் ‘எதையும் தாங்கும் ஒரு இதயம்’ அணிக்கு கிடைப்பதெல்லாம் அபூர்வம்தான்!

சதங்கள் விஷயத்தில் இவர் தனியான உலக சாதனைகளை வைத்துள்ளார் என்பதெல்லாம் வேறு கதை!

ராகுலின் இத்தகைய சிறப்புத் தன்மைகள், அவரை ஃபேஸ்புக் மீம்களுக்கு இலக்காக்கியுள்ளது வேறுவகையில்…

அவற்றில், இரண்டு மீம்ஸ்களை மட்டும் இங்கே பார்க்கலாமா..!

மீம் 1: இந்திய அணியினர், நியூசிலாந்து செல்ல விமானத்தில் ஏறுகிறார்கள். ஆனால், தீடீரென ஒரு பரபரப்பு. விமானத்தை இயக்கும் பைலட் வரவில்லை. என்ன செய்வதென்று பலருக்கும் புரியவில்லை.

அப்போது, பைலட் இல்லையென்றால் என்ன? அதான் நம்ம ராகுல் இருக்கிறாரே! அவரை வைத்தே நாம் விமானத்தை இயக்கி நியூசிலாந்து சென்றுவிடலாம் என்ற பரிந்துரை வருகிறது.

மீம் 2: கிரிக்கெட் வீரர்கள் மைதானப் பயிற்சியில் ஈடுபடும்போது, கால்பந்தாட்டத்திலும் ஈடுபடுவது வழக்கம்.

அப்படியாக, ராகுல் கால்பந்து பயிற்சியில் ஈடுபடும் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவரும் கதிகலங்கி நிற்பதைப் போன்ற ஒரு படம்.

இந்த மீம்களைப் பார்த்து, எத்தனை பேர் எப்படியெல்லாம் ரசித்து சிரித்திருப்பார்கள்..!

– மதுரை மாயாண்டி