நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர்ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

சினிமா சக்சஸ் வரலாறுனா இப்படி இருக்கணும்..

ஒரு சினிமா வெற்றிபெறும். நூறு நாட்கள் ஓடும். அவ்வளவு ஏன், வெள்ளிவிழா கூட கொண்டாடும்.. ஆனால் 1965ல் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய ஆனந்த அதிர்ச்சிகள் அளவிட முடியாதவை.

படத்தின் பிரமாண்ட வெற்றியால் மகிழ்ந்து போன படத்தின் தயாரிப்பாளர் நாகிரெட்டி எம்ஜிஆருக்கு அளித்து, அவர் திருப்பி அனுப்பிய உபரி ஒரு லட்ச ரூபாயை கொண்டு அப்போதைய சென்னை புறநகர் பகுதிகளில் சில ஏக்கர் வாங்கி இருக்கலாம்.. இன்று அந்த நிலம்எத்தனை நூறு கோடிகள் போயிருக்கும்?

எங்க வீட்டுப் பிள்ளையின் பிரமாண்ட வெற்றி பெற்ற 1965 ஆம் ஆண்டு அப்போது The Hindu பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்தது அதே பத்திரிகை..

அந்தக் கட்டுரையை மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் Kathir vel சார் தமிழாக்கம் செய்து முகநூலில் பதிவிட்டு இருந்தார்.. இதோ அந்த பதிவு..


எங்க வீட்டு பிள்ளை படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்.

வசூலில் இதுவரை கண்டிராத சாதனை படைத்த அந்த படம் இப்போது வெள்ளி விழா கொண்டாடுகிறது. ப்டத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டு மழையில் நனைகிறார்கள். படத்தை வினியோகித்தவர்களும் திரையிட்டவர்களும் லாபத்தில் திளைக்கிறார்கள்.

சமீப காலங்களில் ஒரு படம் வெள்ளி விழா காண்பதே அரிதாகி விட்டது. கல்யாண பரிசு, பாவ மன்னிப்பு, பாச மலர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் மட்டுமே வெள்ளி விழா கண்இருக்கின்றன. ஆனால் அந்த பெருமையும் எங்க வீட்டு பிள்ளையின் சாதனைக்கு நிகராகாது.

எப்படி என்றால், அந்த படங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு தியேட்டரில் மட்டுமே 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடின. எங்க வீட்டு பிள்ளையோ மெட்ராசில் மட்டுமே கேசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களில் வெள்ளி விழா தாண்டி சக்கைபோடு போடுகிறது. இது தவிர மதுரை, கோயமுத்தூர், திருச்சி, தஞ்சாவூர் என வேறு ஊர்களிலும் இந்த சாதனையை புரிந்திருக்கிறது.

படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் இந்த மகத்தான சாதனையை நினைத்து பெருமை கொள்ளலாம். ஒட்டுமொத்த தென் இந்திய திரை உலகமே அவர்களுக்கு தலை வணங்குகிறது.

ஆச்சரியம் என்ன என்றால், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோரை காட்டிலும் எங்க வீட்டு பிள்ளை மூலமாக அதிகம் சம்பாதித்து இருப்பது நமது அரசாங்கம்தான். த்ன் இந்தியா முழுவதிலும் இருந்து இந்த ஒரு படத்தின் மூலமாக மட்டும் அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் கேளிக்கை வரி எவ்வளவு தெரியுமா? 50 லட்சம்!

எங்க வீட்டு பிள்ளை படத்தின் பிரமிக்க வைக்கும் இந்த வருமானமும் லாபமும் திரைப்பட தயாரிப்பிலும் வினியோகத்திலும் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்து அவர்கள் இன்னும் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய தூண்டுதலாக அமைந்துள்ளது.

மதராஸ் பட்டணத்தில் வசிக்கின்ற மொத்த ஜனங்களான 20 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் எங்க வீட்டு பிள்ளை படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அது சாதாரண சாதனை கிடையாது.

ஒரு திரைப்படம் இந்த அளவுக்கு மகத்தான வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்?

காரணங்களை கண்டுபிடிக்க சிரமப்பட தேவையில்லை. ஒரு தடவை பார்த்தவர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வரவழைக்கும் விதமாக படத்தின் கதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்திருந்தது என்பது முதல் காரணம். மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் தவிர, படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிய வைக்கப்படும் நீதியும் இன்னொரு காரணம். தனிமனித ஒழுக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் கதையம்சம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

நடுங்கும் கோழையாகவும் அட்டகாசமான ஜாலி பேர்வழியாகவும் இரண்டு வேடங்களில் வெளுத்துக் கட்டியிருக்கும் எம்ஜிஆரின் பிரமாதமான நடிப்பு வேறு எதை விடவும் முக்கியமான காரணம்.

இரண்டு முற்றிலும் வேறுபட்ட பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அற்புதமாக நடித்திருந்தாலும், கோழையான நல்லவனாக எம்ஜிஆர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அபார நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் அததனை பேரின் உள்ளங்களையும் கொள்ளையடிக்கிறார்.
தேர்ந்த விமர்சகர்கள், சினிமா விற்பன்னர்கள், சராசரி ரசிகர்கள் எல்லோரும் சொக்கிப் போகிறார்கள் அவர் இரு வேடங்களிலும் வெளிப்படுத்தும் முக பாவங்களையும் உடல் அசைவுகளையும் பார்த்து. அபாரமான நடிப்புத் திறன் கொண்ட எம்ஜிஆர் இந்தப் படத்தின் மூலமாக பல தடங்களைத் தாண்டியிருக்கிறார் என்று அவர்கள் ஏகோபித்து சிலாகிக்கிறார்கள்.

எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆரின் தனிப்பட்ட வெற்றி என்றும் தாராளமாக சொல்லலாம். இதுவரை அவரே சொந்தமாக தயாரித்து இயக்கி வெளியிட்ட நாடோடி மன்னன் படம்தான் தமிழில் மிகப்பெரிய வசூலைக் குவித்த படமாக இருந்து வந்தது. எங்க வீட்டு பிள்ளை படத்தின் மூலமாக தனது சாதனையை அவரே முறியடித்திருக்கிறார்.

இந்த படம் இதுவரை வெளியான எந்தப் படங்களையும்விட பல வகையிலும் மேம்பட்டது. கண்ணைப் பறிக்கும் வண்ணப் படம் என்பது பிரதானமான அம்சம். காட்சி அமைப்பில் ஆகட்டும், தொழில் நுட்ப நேர்த்தியில் ஆகட்டும் இது புதிய மதிப்பீடுகளை கோரும் படம். மொத்த படப்பிடிப்பும் 45 நாட்களில் முடிந்தது புதிய சாதனை. பூஜை போட்ட இரண்டரை மாதத்தில் படம் திரைக்கு வந்து விட்டது என்பதே பிரமிக்க வைக்கும் நிகழ்வாகும். இந்தியாவில் வேறு எந்தப் படமும் இந்த சாதனையை புரிந்ததில்லை.

இது எப்படி சாத்தியமானது என்று தயாரிப்பாளர் நாகிரெட்டி, சக்கரபாணியை கேட்டால் ஒரே நபரை கைகாட்டுகிறார்கள்.

“பணத்தை முதலீடு செய்தவர்கள் நாங்கள்தான் என்றாலும், இது முழுக்க முழுக்க எம்ஜிஆர் படம். அவரே கதாநாயகன், அவரே தயாரிப்பாளர், அவரே இயக்குனர் என்று சொல்லும் அளவுக்கு எல்லா பொறுப்புகளையும் தோளில் சுமந்தார். அவருடைய திராமைக்கும் வேகத்துக்கும் ஈடுகொடுக்க எல்லோரும் திணறிப் போனோம். ப்டத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் பார்த்துப் பார்த்து செதுக்கினார். ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணி நேரம் எம்ஜிஆர் இந்தப் படத்துக்காக உழைத்ததை பார்த்து அசந்து விட்டோம்” என்று சொன்னார்கள் இரு ஜாம்பவான்களும்.

எம்ஜிஆருக்கு நடிக்க வராது என்பதுதான் இதுவரை பொதுவான ஒரு கருத்தாக சொல்லப்பட்டது. ஜாலியாக வந்து ஆடிப்பாடி சிரித்து சண்டை போட்டு மகிழ வைக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே அவரால் ஜொலிக்க முடியும் என பலரும் நினைத்தார்கள்.

அவ்வளவு எதற்கு. நிறைய படித்த, பல மொழி படங்களை பார்த்து ரசிக்கும் திரைப்பட ரசிகர்கள் ‘நான் எம்ஜிஆர் படத்துக்கெல்லாம் போவதில்லை’ என்று கொஞ்சம் கர்வத்துடனே சொல்லுவார்கள். அவர்களுக்கெல்லாம் எங்க வீட்டு பிள்ளை மூலம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு நடிக்க தெரியுமா என்ற கேள்வியை இனி அவர்கள் கனவிலும் கேட்க மாட்டார்கள்.

எம்ஜிஆர் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. பன்முக திறமை, தொழில் ஈடுபாடு, கடின உழைப்பு, கடைநிலை தொழிலாளிகளையும் சமமாக பாவித்து பாராட்டும் நட்புணர்வு எல்லாமே அவரது வெற்றிக்கு உதவியிருப்பதை இப்போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.

இந்த நல்ல குணங்கள் எம்ஜிஆரிடம் வெளிப்படுவது திரையில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும்தான். அதனால்தான் அவருக்கு இத்தனை பிரமாண்டமான ரசிகர் பட்டாளம் வாய்த்திருக்கிறது.

நன்றி Kathir Vel sir