சென்னை:

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி எனது 40ஆண்டு கால அனுபவத்தில் காணாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளதாக, பிரபல மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் கூறி உள்ளார்.

நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதில் வாகனத்தொழில் கடும் ஆட்டத்தைக் கண்டுள்ளது. நாட்டின் பெரும் தொழிலதிபர்கள், பொருளாதார பின்னடைவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இந்தியாவில் வாகன விற்பனை  30 சதவிகிதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய போக்குவரத்து  அமைச்சகம் வாகனப் பதிவுக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியதுடன்,  வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி, இன்சூரன்ஸ் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது போன்ற காரணங்களால் வாகன விற்பனை 50 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது இதன் காரணமாக பல வான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது.

பிரபல கார் நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கிய நிலையில், தற்போது  இரண்டு தொழிற்சாலைகளை மூடுவதாகவும் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் தனியார் டிவி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், தற்போதைய பொருளாதார வீழ்ச்சி எனது 40ஆண்டுகால வரலாற்றில் காணப்படாத சரிவு என்று கடுமையாக விமர்சித்தார்.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறித்து  மத்தியஅரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்தவர், அதன் காரணமாக  வாகன விற்பனையில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என நம்புவதாகவும் தெரிவித்து உள்ளார்.

தற்போதைய பொருளாதார சரிவு மேலும் 3, 4 மாதங்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வர், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சீராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.