இது பேரணி இல்லை; போர் அணி!’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  இது பேரணி அல்ல; போர் அணி என்று மத்திய பாஜக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று திமுக தலைமையில், அதன் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. கொலை 9.15 மணி அளவில், எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் இருந்து  பேரணி தொடங்கியது.

இந்தப் பேரணியில், திமுகத் தலைவர் ஸ்டாலின் உடன், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழககாங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன், திமுக இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின் உள்பட அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்,  நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் பேரணியில் கலந்துகொண்டனர்.

லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த பேரணியில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பேரணியானது கூவம் கரையோரத்தை ஒட்டியுள்ள லேங்ஸ் கார்டன் ரோடு, சித்ரா தியேட்டர் சந்திப்பு வழியாக புதுப்பேட்டையைச் சென்றடைந்து அங்கிருந்து ராஜரத்தினம் திடலில் பேரணி நிறைவு பெற்றது.

இதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, இச்சட்டத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

‘ஒன்றாய் வாழும் இந்தியர்களைப் பிரிக்காதே, மதவெறியைத் தூண்டாதே, இந்தியாவின் இறையாண்மையை காவிக் கொடியால் மறைக்காதே’, ‘குடியுரிமைச் சட்டமா குழி பறிக்கும் சட்டமா’ போன்ற முழக்கங்கள் மத்திய அரசை நோக்கி எழுப்பப்பட்டன.

இதன் பின்னர்,  திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக கூட்டணி நடத்தியது பேரணி அல்ல,போர் அணி என்றும், மத்திய குடியுரிமை சட்ட திருத்த‌த்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்று ஆவேசமாக கூறினார்.

இந்த பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்தஅரசுக்கு நன்றி என்று கூறியவர்,  திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தவர், இந்த பேரணிக்கு பாதுகாப்பாக வந்த 10 ஆயிரம் காவலர்களும் திமுக பேரணியில் பங்கேற்று தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியமைக்கு நன்றி என்று கூறினார்.

இந்தியா இதுவரை கட்டிக்காத்து வந்த அனைத்து நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, மோசமான இந்தியாவை உருவாக்க பாஜக நினைக்கிறது அதனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் போராட்டத் தீப்பற்றி கொண்டு எரிகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.