திருவாரூர் கே.எஸ்.எஸ். இல்லம்

திருவாரூர் – மடப்புரத்தில் குரு தட்சிணாமூர்த்தி மடத்துக்கு எதிரில் கிடக்கிறது அந்த வீடு. ஆம்… “இருக்கிறது” என்கிற சொல்ல முடியாத அளவுக்கு – களத்தில் வீழ்ந்த வீரன் போல், காலத்தின் ஓட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் சிதிலமடைந்து கிடக்கிறது அந்த வீடு.

வீட்டின் முகப்பில் கே.எஸ்.எஸ். ராஜன் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த வீட்டுக்கு என்று வரலாறு உண்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், திராவிட வரலாறு.

“குறிப்பாக… இந்த வீட்டுடன் முரசொலி நாளிதழுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு” என்கிறார் ராஜகுமாரன். இவர், சென்னையில் திரைத்துறையில் இருந்தாலும் இவரது பூர்வீகம் திருவாரூர். “முதல்வருக்கெல்லாம் முதல்வர்” என்று அழைக்கப்படும் ஓமந்தூரார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். அதை ஆவணப்படமாகவும் எடுத்துள்ளவர். அதோடு கருணாநிதியின் சிறுகதைகளை தொலைக்காட்சித் தொடராக எடுத்தவர். அது மட்டுமல்ல.. கருணாநிதியின் இளவயதில் நெருங்கிய நண்பர்களாக விளங்கியவர்களுள்  ஒருவரான கவிஞர் சண்முகத்தின் மகன் இவர்.

ராஜகுமாரன்

இதோ ராஜகுமாரன் கூறுகிறார்:

“அக்கலாத்தில் திருவாரூரில் மிகவும் புகழ் பெற்றிருந்த கே.எஸ்.எஸ். ராஜன் என்ற பெரும் பிரபலத்தின் வீடு இது. திராவிட இயக்க பற்று கொண்டவர் அவர்.

இவரது வீட்டிற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்… இப்படி திராவிடத் தலைவர்கள் பலர் வந்து தங்கிச் சென்றிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல.. தி.மு.க தலைவர் கருணாநிதி சிறு வயதில் தனது தோழர்களுடன் அரசியலும், இலக்கியமும் பயின்ற இடம் இது.

அப்போது கருணாநிதியின் நெருங்கிய நண்பர்கள் கவிஞர். வ.கோ. சண்முகம். தனது இலக்கிய ஆர்வத்துக்குக் காரணமானவர்களில். சண்முகத்தையும் குறிப்பிடுவார் கருணாநிதி.

இந்த வீட்டில்தான் சிறுவயதில் கருணாநிதி, சண்முகம், சதாசிவம் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்.

அந்த காலகட்டத்தில்தான் “முரசொலி” என்ற இதழை (கையெழுத்து இதழாக) துவக்க வேண்டும் என்ற விதை கருணாநிதியின் மனதில்  விழுந்தது.

இது குறித்து சதாசிவம் என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறார். இவர் இந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர். பிற்காலத்தில் ஆசிரியர் பணி புரிந்தார்.

கவிஞர். வ.கோ. சண்முகம்

அவர் “இந்த வீட்டின் மொட்டை மாடியில்தான் முரசொலிக்கான விதை விழுந்தது. அப்போது அந்த இதழைத் தொடங்க கருணாநிதி, தன் நண்பர்களிடம் நன்கொடை பெற முயற்சித்தபோது இரண்டு நண்பர்கள் முதல் நன்கொடையாளர்களாக ஆளுக்கு 50 காசுகள் அளித்து அவரை ஊக்குவித்தனர்” என்றார்.

அப்படி முதன் முதலில் முரசொலிக்கு நன்கொடை அளித்தவர்கள் இந்த சதாசிவம். இன்னொருவர் கவிஞர் சண்முகம்.. என் தந்தை” என்றார் ராஜகுமாரன்.

“முரசொலி பவளவிழா கண்காட்சி இன்று துவக்கிவைக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த “கே.எஸ்.எஸ். ராஜன் இல்லம்” பற்றிய குறிப்பையும் சேர்க்கலாம்.  முரசொலியை கருணாநிதி ஆரம்பித்த காலத்தில் உதவியாய் நின்றவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளை கவுரவப்படுத்தலாம்.  நடிகர்கள், திராவிட சிந்தனைக்கு எதிரான பத்திரிகை முதலாளிகளை கவுரவித்து அழைத்ததற்கு பதிலாக இவற்றைச் செய்திருக்கலாமே  என்பதுதான் கருணாநிதியின் ஆரம்பகால வாழ்க்கையை அறிந்தோர் மற்றும் மூத்த திராவிட இயக்க பற்றாளர்களின் விருப்பம்.