சென்னை:

ர்கே நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மாற்றப்பட்டதற்கு  விஷால் வேட்புமனு  விவகாரம் தான் என்று கூறப்படுகிறது.

ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்
அத்தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளார்.  அவருக்கு பதிலாக கடந்த முறை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் நாயர் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால் வேட்புமனு விவகாரம்தான் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 5ஆம் தேதி விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் பலவித குளறுபடிகள் ஏற்பட்டன. முதலில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்தார்.  பிறகு ஏற்கப்படும் என்று அவர் தெரிவித்ததாக   தகவல் வெளியானது. பிறகு நள்ளிரவில் வேட்பமனு நிராகரிக்கப்படுவதாக அதிகாரப்பூர்மாக தெரிவிக்கப்பட்டது.

 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் அளித்தார். ஆளும்கட்சியின் மிரட்டலாலேயே தன்னை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதாக கூறினார்.

மேலும், தன்னை முன்மொழிந்தவர்களை ஆளும் கட்சியினர் மிரட்டியதற்கு ஆதாரமாக ஒரு ஆடியோவையும் வெளியிட்டார். இந்த நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, “வேட்புமனுவை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்துமூலம் தேர்தல் நடத்தும் அதிகாரி அளிக்க வேண்டும். வாய்மொழியாக சொல்ல முடியாது. ஆனால் விஷால் விவகாரத்தில் அந்த நடைமுறையை பின்பற்றப்படவில்லை. முதலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறிய ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, அதன் பிறகு நிராகரிக்கப்பட்ட மனு ஏற்கபட்டதாகவும் வாய்மொழியாக தெரிவித்துள்ளார். இறுதியில்தான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார்” என்று லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்தும், வேட்புமனு தாக்கல் செய்த போது தேர்தல் பார்வையாளர்கள் இல்லாதது குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளார்.  விஷால் வேட்புமனு விவகாரத்தில் அவர் சரியாக செயல்படவில்லை என்பதாலேயே இந்த நவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.