சென்னை:

சென்னையில் தண்ணீரை கொள்ளையடிக்கும் விவிஐபிக்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிழகத்தில் வரலாறு காணாத குடிதண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் குடிதண்ணீருக்காக இரவு பகல் பாராமல் காலி குடங்களுடன் சாலையில் திரியும் அவலம் நடந்தேறி வருகிறது.

ஆனால், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் கிடையாது என்றும், தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பரப்பி வரும் வதந்தி என்றும்  மறுத்து வருகின்றனர்.

சென்னைவாசிகள் குடிநீருக்கான நாயாக அலைந்து திரிவது, அவர்களுக்கு தெரிவதில்லை…  மக்களின் கஷ்டம் புரியவில்லை.

சென்னையில் உள்ள பாரம்பரியம் மிக்க ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிப்பபட்டு வரும் நிலையில், அங்கு தண்ணிர் பிரச்சினையே கிடையாது என்று அமைச்சர்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வருகின்றனர். ஆனால் அங்கு தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடு வதை அனைத்து ஊடகங்களும் ஆதாரங்களுடன் வெளியிட்டு தமிழகஅரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்பட விவிஐபிக்கள் அடிக்கும் தண்ணீர்  கொள்ளை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்  வெளியாகி உள்ளன.

தனியார் ஊடகம் ஒன்று இதுகுறித்து நடத்திய ரகசிய ஆய்வில், மக்களை பாதுகாக்கும் முதல்வர் உள்பட பல அமைச்சர் பெருமக்களே, மக்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீரை தங்களது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தி வருவது அம்பலமாகி உள்ளது.

அதனப்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு நாள் ஒன்றுக்கு 27ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. ஒரு தடவை 9ஆயிரம் லிட்டர் அளவில் நாள் ஒன்றுக்கு 3 முறை அவரது குடும்ப தேவைகளுக்காக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர்கள் வீடு, நீதிபதிகள் வீடு மற்றும் அரசு  உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கும் தட்டுபாடின்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

மக்கள் குடிதண்ணீருக்காக டாங்கர் லாரியை எதிர்பார்த்து வீதிகளில் காத்துக்கொண்டிருக்கையில், டாங்கர் லாரிகளோ விவிஐபிக்களின் பங்களாவுக்குள் சென்றதையும் அந்த ஊடகம் படம்பிடித்துள்ளது.

தமிழக அமைச்சர்களின் தண்ணீர் கொள்ளை மக்களை மேலும் வேதனைப்படுத்தி உள்ளது.

Credit : Shabbir Ahmed of Times Now