மதராஸா பள்ளியில் படித்தவர் சிவில் சர்வீஸ் தேர்வில் 751-வது ரேங்க் பெற்று சாதனை

பாட்னா:

இஸ்லாமை போதிக்கும் மதராஸா பள்ளியில் படித்தவர் சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே 751-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.


பீகார் மாநிலம் அமினாபாத்தைச் சேர்ந்தவர் 28 வயதான ஷாகீர் ரஜா கான். பீகாரில் இஸ்லாமை போதிக்கும் மதராஸா பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார்.

7 ஆண்டுகால கடின உழைப்பால் இன்று அவர் முன் ஐஏஎஸ் ஆவதா? ஐபிஎஸ் ஆவதா? ஐஎஃப்எஸ் ஆவதா? என  வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இந்த சாதனை எப்படி நிகழ்ந்தது என்று கானிடம் கேட்டபோது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில்751- வது ரேங்க் பெற்றேன்.

எப்படி மனப்பாடம் செய்வது என்பதையும்,வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் மதராஸாவில் கற்றுக் கொண்டேன்.

குரானும், அரபிக் இலக்கியமும் நினைவாற்றலை அதிகரிக்க உதவின. இவை சிவில் சர்வீஸ் தேர்வை எளிதாக எதிர்கொள்ள உதவியாக இருந்தன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரபிக் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை முடித்தேன். தற்போது இஸ்லாம் குறித்து அதே பல்கலைக் கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வருகின்றேன்.

எனது வெற்றிக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
மத நம்பிக்கை இருந்ததால், மதராஸாவில் படிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாக இருந்தது.

ஒர் அரசு உயரதிகாரியாக இந்த சமுதாயத்துக்கு என்னால் முடிந்த நல்லதை செய்ய விரும்புகின்றேன் என்றார்.