சென்னையில் தோட்டக்காரராக வேலை பார்க்கும் அனில் சர்மா, பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் முரட்டு தொண்டர்.
பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள வைனா கிராமத்தை சேர்ந்த இவர், அங்குள்ள கொரியா பாபா கோயிலில் 2005 ஆம் ஆண்டு விநோத வேண்டுதல் செய்து கொண்டார்.
என்ன வேண்டுதல்?


’’நிதீஷ்குமார் முதல்-அமைச்சரானால் எனது விரலை காணிக்கையாக உனது காலடியில் சமர்ப்பிக்கிறேன்’’ என பாபாவிடம் முறையிட்டார்.
அந்த தேர்தலில் நிதீஷ் வென்று , முதன் முறையாக முதல்வர் ஆனார்.
வாக்குறுதி அளித்த படி, பாபாவுக்கு முதன் முறையாக விரலை வெட்டி காணிக்கையாக கொடுத்தார்.
அப்போது முதல் நிதீஷ்குமார் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போதெல்லாம் , அனில் சர்மா, விரலை வெட்டி காணிக்கை செலுத்தி வருகிறார்.
அண்மையில் நான்காவது முறையாக நிதீஷ், முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற சர்மா, பாபாவுக்கு தனது ஆள் காட்டி விரலை துண்டித்து காணிக்கையாக செலுத்தினார்.
இப்போது அவரிடம் ஆறு விரல்கள் பாக்கி உள்ளன. அதுவும் நிதீஷ்குமாருக்குத்தான் என்கிறார், சர்மா.
‘’இப்போது என்னிடம் ஆறு விரல்கள் எஞ்சி உள்ளன. நிதீஷ்குமார் மீண்டும் மீண்டும் முதல்வராகும் பட்சத்தில் இந்த விரல்களையும் கடவுளுக்கு ’’காவு’ கொடுப்பேன்’’ என்கிறார்,சர்மா.
சர்மா, முரட்டு தொண்டரா? மூடத்தொண்டரா? என அங்குள்ளோர் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்..

-பா.பாரதி.