Random image

அந்தக்கால அபிராமியின் பாவத்தைப் போக்கிய திருத்தலம்!

தேனும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் அது ஈர்த்துவிடுகிறது. “இப்படியும் செய்வார்களா மனிதர்கள்… இதுவரை இப்படி நடந்ததில்லையே…” என்று பலரும் பேசுவர்.

ஆனால் என்னதான் காலம் மாறினாலும், மனிதர்களின் மனதில் இருக்கும் மர்மப்பக்கங்கள் அப்படியேதான் தொடர்கின்றன.

சமீபத்தில் தனது திருமண பந்தத்தை மீறிய உறவுக்காக தான் பெற்ற குழந்தைகளையே கொன்ற அபிராமி என்ற சென்னை பெண்மணி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்தார். தனது கணவரையும் கொல்ல முயன்ற அவரது திட்டமும் அம்பலமானது. வழக்கம்போலவே, நாம், ”இப்படியும் நடக்குமா” என்று அதிர்ந்தோம்.

ஆனால் இது போன்ற பெண்மணி ஒருவர் ஆதிகாலத்தலேயே இருந்திருக்கிறார் என்கிறது புராணம்.

சிவபுராணத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது.

அக்காலத்தில் லோககாந்தா என்ற பெண்மணி வாழ்ந்தாள். உரிய காலத்தில் அவளுக்கு மணமுடித்துவைத்தனர் பெற்றோர். அவளது உடல் சுக ஏக்கம் கரை காணாத கடல்போல் பரந்து விரிந்ததாய் இருந்தது. கணவனைத்தாண்டியும் வெளியில் பலருடன் உறவு வைத்துக்கொண்டாள்.

கணவன் இதை அறிந்து தட்டிக்கேட்க… ஒரு கட்டத்தில் அவனைக் கொலை செய்துவிட்டாள். பிறகு தன் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்தாள்.

காலம் ஓடியது… நரம்புகள் ஒடுங்கின.. சதைகள் சுருங்கின… அவளைச் சுற்றி வந்த ஆண்கள் ஒதுங்கினார்கள்.

அடைக்கலம் தருவார் எவருமின்றி, மனம் நொந்து…திருக்கோடிக்காவல் வந்தாள்.

சிவஸ்தலமான இங்கு மூலவர் கோடீஸ்வரர் என்கிற கோடிகாநாதர். அம்மன் – திரிபுர சுந்தரி என்கிற வடிவாம்பிகை.

மூலவர் கோட்டீஸ்வரர்

மூலவரையும் அம்மனையும் மனதார தொழுதாள் லோககாந்தா. தன் தவறுகளை எல்லாம் மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினாள். அக்கோயிலிலேயே பொழுதைக் கழித்தாள்.

அவளது இறுதிக்காலம் நெருங்கியது. பொல்லா வாழ்க்கை வாழ்ந்த அவளை தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்ல எமன் வந்தார்.

ஆனால் சிவ தூதர்களான சிவகணங்களோ இதைத் தடுத்தனர். அவளை நரகலோகம் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

எமதர்மராஜன், இதுகுறித்து சிவபெருமானிடம் முறையிட்டான். அதற்கு சிவபெருமான், “எனது தலமான திருக்கோடிக்கா வந்து மன்னிப்பு வேண்டியோரை தண்டிக்க உனக்கு அதிகாரம் இல்லை. இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. இந்த மண்ணை மிதித்தவர்களிடம் நீ நெருங்கவே கூடாது’ என்று கட்டளையிட்டார்.

எமன் திரும்பிச்சென்றான் என்கிறது புராணம்.

அம்மன் திரிபுர சுந்தரி

மனிதர்களில் சிலர் கொடும் பாவம் செய்வது இயல்பு. அவர்களை மன்னித்தல் இறைவனின் இயல்பு என்பதைக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது இந்த புராணம்.

இப்புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும்

திருக்கோடிக்காவல் ஆலயம் கும்பகோணம் அருகே உள்ளது.

எமபயம் போக்கும் திருத்தலம் என்று போற்றப்படும் இத்திருத்தலம்  மூன்று கோடி முனிவர்களால் வழிபடப்பட்டதாகும்.

ஆதிகாலத்திலிருந்தே இக்கோயில் இருந்தாலும்,  கண்டாதித்த சோழன் காலத்தில் அவனது மனைவி செம்பியன்மாதேவியால் கற்றளியாக திருப்பணி செய்யப்பட்டு இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. இங்கு பல்லவர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. சிவபெருமானின் 64 லீலைகளை பல்லவ கால சிற்பங்களில் இத்தலத்தில் காணலாம்.

இங்கு தல விருட்சம் – பிரம்பு. தீர்த்தம் – சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரி நதி.

இக்கோயில் குறித்த இன்னொரு புராண சம்பவமும் உண்டு. மந்திரங்கள் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்டார்  துர்வாசர்.  மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் தவிதவித்துப்போயின. பிறகு சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சரிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனைத் தரிசனம் செய்துள்ளனர்.

ஆகவேதான் இத்தல இறைவனின் திருநாமம்  “கோடீஸ்வரர்”  என்றும்,  ஊர் “திருக்கோடிக்கா” அழைக்கப்பட்டது.

இங்குள்ள உத்திரவாகினி தீர்த்தத்தில்  கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.