புதுடெல்லி: வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் குற்றாவளியென உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருப்பது, பொதுமக்களின் பார்வையில் அம்மன்றத்தின் கண்ணியத்தைக் குறைத்துள்ளது என்று சிஜேஏஆர் அறிக்கை கூறியுள்ளது.

நீதித்துறை பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரம் என்ற அமைப்பு, சிஜேஏஆர் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் பொறுப்பாளராக உள்ளவர்தான் பிரஷாந்த் பூஷன்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் ஏ.பாப்டே மற்றும் நீதிமன்ற புகைப்படம் தொடர்பாக பிரஷாந்த் பூஷன் பதிவிட்ட டிவிட்டர் கருத்துகளால், அவர் நீதிமன்றத்தை அவதூறு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது தனது பேச்சுரிமை என்று வாதிட்டது பூஷன் தரப்பு.

மேலும், விமர்சனம் என்பது அவதூறு ஆகாது என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தண்டனை விபரங்கள் ஆகஸ்ட் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், “ஒருகாலத்தில், உலகின் சக்திவாய்ந்த அரசியலமைப்பு நீதிமன்றம் என்று புகழப்பட்ட இந்திய உச்சநீதிமன்றம், மிகவும் மிதமான மற்றும் நல்ல நோக்கத்துடன் கூடிய விமர்சனங்களை தாங்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

நீதிமன்றத்தின் கெளரவம் மற்றும் கண்ணியத்தை காயப்படுத்தும் வகையிலான இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“தற்போதைய கொரோனா காலத்தில், மக்களின் நலன் சார்ந்த பல முக்கிய வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியுள்ள நிலையில், இந்த முக்கியத்துவமற்ற வழக்கில், இந்தளவிற்கு அக்கறையும் வேகமும் காட்டியது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளது அந்த அமைப்பு.