சென்னை,

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சற்று முன்கூட்டியே வந்திருக்கக்கூடாதா என வருத்தம் தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ஓராண்டுக்கு முன் இந்தத் தீர்ப்பு வந்திருந்தால் தமிழகத்தின் இன்று ஓர் ஊழல் ஆட்சி அமைந்திருக்காது என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக்குவித்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் குற்றவாளிகள் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருடைய தண்டனை மட்டும் நிறைவேற்றப்படாது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஊழல் உருவெடுத்துள்ளது. இதுபோன்ற ஒரு தீர்ப்பின் மூலம் தான் தமிழகத்தில் ஊழலையும், ஊழல்வாதிகளையும் அகற்ற முடியும் என்று நான் நீண்டகாலமாக கூறி வருகிறேன்.

அந்த வகையில் இந்தத் தீர்ப்பு சற்று முன்கூட்டியே வந்திருக்கக்கூடாதா என்ற வருத்தம் மட்டுமே எனக்கு உள்ளது. ஓராண்டுக்கு முன் இந்தத் தீர்ப்பு வந்திருந்தால் தமிழகத்தில் இன்று ஓர் ஊழல் ஆட்சி அமைந்திருக்காது. தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலே வேறுபட்டதாக இருந்திருக்கும்.

அதிமுக தனிநபர் சார்ந்த கட்சி என்பதால் இத்தீர்ப்பு வெளியான பிறகு அக்கட்சி கரைந்து போயிருக்கும். அதனால் ஊழல் நிர்வாகம் மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் தமிழகம் தப்பித்திருக்கும். தாமதமாக வந்தால் கூட பொதுவாழ்வில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த ஆயுதமாக உருவெடுத்துள்ள இத்தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்.

நாட்டில் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மிகச்சிறந்த பாடமாக இந்தத் தீர்ப்பு அமையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை பெற்றுத்தந்த கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வழக்கிலிருந்து அவரை விரட்ட பல முயற்சிகள் நடந்தன. அவரையே ஊழல்வாதி என்று முத்திரை குத்தவும், அவரது நடத்தையை கொலை செய்யவும் முயற்சிகள் நடந்தன. ஆனாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தப் போராடி இத்தீர்ப்பை அவர் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தின் இப்போது மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. விவசாயிகள் வறுமை மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர்; ஊழல் தலைவிரித்தாடுகிறது; மது வெள்ளமாக ஓடுகிறது; தமிழக அரசின் கடன் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது; சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இவற்றையெல்லாம் சரி செய்யவும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், தமிழக அரசு நிர்வாகத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்காணிக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பது தொடர்பாக குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில்,

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் ஆளுநர் உறுதி செய்ய வேண்டும். குதிரை பேரம் நடப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துப் பேசி அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து, தகுதியானவர்களை தமிழகத்தில் புதிய அரசு அமைக்க வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும்” என்று  அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.