லக்னோ:

நாட்டுக்கு இதுதான் கடைசி தேர்தல் என பாஜக எம்பி சாக்சி மகராஜ் கூறியுள்ளார்.


சாமியாரான சாக்சி மகராஜ் பாஜகவின் எம்பியாக இருக்கிறார். அவ்வப்போது பரபரப்பாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பேசுவது இவர் வழக்கம்.

உன்னாவோ தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராவார். அதன்பிறகு, இந்தியாவில் தேர்தல் நடக்காது. நான் சந்நியாசி. நான் சொன்னால் பலிக்கும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து பாஜகவினர் கூறும்போது, “அவர் எதையாவது சொல்வார். பின்னர் அதை திரும்பப் பெறுவார். அவர் சொல்வதை எல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்” என்றனர்.

எந்த மதத்தவராக இருந்தாலும், இறந்த பின் உடலை எரிக்கவேண்டும் என்றும், 4 மனைவிகள், 40 குழந்தைகள் இருப்பதே நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு காரணம் என்றும் இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், எனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புத் தராவிட்டால், பாஜக பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார்.

பிரதமர் மோடியால் மட்டுமே நாட்டை சுபிட்சமாக வைத்திருக்க முடியும். இதை பிடிக்காதவர்கள்தான் உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தியையும், சமாஜ்வாதி&பகுஜன் சமாஜ் கட்சியையும் முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள் என்றும் சாக்சி மகராஜ் கூறினார்.