டில்லி

சென்ற வருடத்தை விட சுமார் 25% அதிகம் ஐ டி ரிடர்ன் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 2.83 கோடி ரிடர்ன்கள் இதுவரை பதிவாகி உள்ளன.

கடந்த வருடம் பணமதிப்புக் குறைப்பு அறிவிப்பு வெளிவந்த பின் அனைத்து மக்களும் தங்கள் பணத்தை வங்கியில் மாற்றிக் கொண்டுள்ளனர்.   இதன் விளைவாக வரி கட்டாமல் மற்றும் ரிடர்ன் பதியாமல் இருந்தவர்கள் அனைவரும் தற்போது ரிடர்ன் பதிய வேண்டியதாகி விட்டது.  வழக்கத்தை விட அதிக அளவில் ரிடர்ன்கள் பதிவதால் கடைசி தேதி என முதலில் அறிவிக்கப்பட்டி ஜூலை 31, பிறகு ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டது.

வருமான வரித்துறை இது குறித்து தெரிவிப்பதாவது :

கடைசி தேதியான ஆகஸ்ட் 5 வரை 2,82,92.955 பேர் தங்களின் ரிடர்ன்களை பதிவு செய்துள்ளனர்.  இது சென்ற வருடம் பதிவான 2,26,97,843 ரிடர்ன்களை விட சுமார் 24.7% அதிகமாகும்.  சென்ற வருடம் பதிவான ரிடர்ன்கள் அதற்கு முந்தைய வருடத்தை விட வெறும் 9.9% மட்டுமே அதிகரித்து இருந்தது.

தற்போது அனைத்து பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாக்க எடுக்கப்படும் முயற்சிகளால், முன்பைப் போல மறைவான பணப் பரிமாற்றம் வெகுவாக குறைந்துள்ளது.   எனவே நடவடிக்கைகளை தவிர்க்க வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் பலர் இருப்பதாலும் இந்த வருடம் அதிக ரிடர்ன் பதிவாகி இருக்ககூடும்.  ஆனால் இது வெறும் ஆரம்பமே.  வரும் வருடங்களில் இன்னும் அதிகம் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர வரி கட்டாத பணத்தைப் பற்றிய விவரங்களை தாமாக முன்வந்து தெரிவிப்பவர்களுக்கு தண்டனை இல்லை என அறிவித்திருந்ததன் காரணாமாக பலர் தங்கள் வருமானத்தைப் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளனர்.  இது போல தெரிவித்தவரகள் சுமார் 5.56 லட்சம் பேர்கள் ஆவார்கள்.  அதே போல வருமான வரி ரிடர்ன்களில் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்காத 1.04 லட்சம் பேர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.  அதே போல் பணமதிப்புக் குறைப்புக்கு பின் வங்கிக்கணக்கில் திடீரென அதிகப் பணம் செலுத்தப் பட்ட வங்கிக்கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 17.92 லட்சம் பேருக்கு அந்த பணம் எப்படிக் கிடைத்தது என தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு அனுப்பப்பட்டது.  அதில் 9.72 லட்சம் பேர் கொடுத்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு ஒத்துக் கொள்ளப்பட்டன.

மீதமுள்ளவர்களில் பலர் வியாபாரிகள்.  தாங்கள் ரொக்க விற்பனை செய்த தொகையை உடனுக்குடன் வங்கியில் செலுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.   அவர்களின் விற்பனை, மற்றும் ரொக்க இருப்பு ஆகியவைகள் இன்னும் பரிசீலனையில் உள்ளன.

பண மதிப்புக் குறைப்பு நடவடிக்கைக்குப் பின் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ 818 கோடி மதிப்புள்ள பொருட்கள், மற்றும் ரூ.612 கோடி ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.  கணக்கு காட்டப்படாத வருமானமாக ரூ.9334 கோடி கண்டறியப்பட்டுள்ளது.   இதுவரை அமுலாக்கத்துறையினரால்  400 வழக்குகள் பதியப்பட்டுள்ளன

இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது