டில்லி

ந்த வருடம் இதுவரை ஒரே ஒரு டாடா நேனோ கார் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது.

கடந்த 2009 ஆம் வருடம் டாடா நிறுவனம் தனது விலை குறைந்த காரான டாடா நேனோ காரை அறிமுகம் செய்தது.  அதன் ஆரம்ப விலை ரூ. 1 லட்சமாக இருந்தது.   டாடாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பலரும் இந்தக் காரை வாங்க விரும்பினர்  இது டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் எனக் கூறப்பட்டது.   ஆயினும் இந்த நேனோ கார் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது.

இந்த கார் மேற்கு வங்கத்தில் உள்ள சிங்குர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட இருந்தது.   ஆனால் அங்குத் தொழிற்சாலை தொடங்க நிலம் கையகப்படுத்த உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எனவே  இந்த தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் சனந்த் பகுதியில் அமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் இந்த காரில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டது.  இதுவும் இந்தக் கார் விற்பனையில் சற்று மந்தத்தை ஏற்படுத்தியது.   அதன் பிறகு இந்தக் காரை மலிவு விலையில் விற்பதால் ஏராளமான பொருள் இழப்பு ஏற்படுவதாக டாடா நிறுவனம் கூறியது.   அப்போதைய டாடா நிறுவனத் தலைவர் மிஸ்திரி இந்த கார் ஒரு கவுரவத்துக்காகத்  தயாரிக்கப்பட்டாலும் மிகுந்த இழப்பை அளிப்பதாக கூறியதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வருடம் ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை ஒரே ஒரு டாடா நேனோ கார் மட்டுமே விற்பனையாகி உள்ளது.  தற்போது இந்தக் காரின் உற்பத்தி முழுமையாக குறைக்கப்பட்டாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாத நிலையில் உள்ளது.  கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 299 டாடா நேனோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றில் 297 கார்கள் விற்பனை ஆகி உள்ளன.