சபரிமலைக்கு முதலில் செல்லப்போகும் முதல் இளம்பெண்  

--

10 முதல் 50 வயதுள்ள பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்று தேவசம்போர்டு காலம் காலமாக விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

“குறிப்பிட்ட வயது பெண்கள் கோயிலுக்கு வரக்கூடாது என்பது சட்டவிரோதம்” என்று தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இத்தீர்ப்பை பக்தர்களில் சிலர் எதிர்த்தாலும், பெரும்பாலானவர்கள் ஆதரித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக சமூக ஆர்வலர்கள் பெண்ணுரிமைவாதிகள் பலரும் தீர்ப்பை கொண்டாடுகிறார்கள். தவிர, “விரைவில் பெண்கள் இணைந்து சபரிமலைக்கு பயணிக்கலாம்” என்று முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், “சபரிமலைக்குச் செல்வோம்” என்று பெண்கள் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் முன்பே, சபரிமலைக்குச் செல்லப்போவதாக அறிவித்த பெண்மணி திருப்தி தேசாய்.

மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மகளிர் நல ஆர்வலரான திருப்தி தேசாய்,  மகளிர் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நடத்திவருபவர்.

திருப்தி தேசாய்

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம், சனிசிங்னாபூர் கோயில் கருவறை, மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவின் கருவறை ஆகியவற்றுக்குள் பெண்கள் நுழைய தடை இருந்ததை போராட்டங்கள் மூலமும், வழக்குகள் மூலமும் உடைத்தவர் திருப்தி தேசாய்.

கடந்த வருடமே, “தடையை மீறி சபரிமலைக்குச் செல்வேன்” என்றும் இவர் அறிவித்தார்.

மேலும், “மும்பை மற்றும் கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சபரிமலைக்குச் செல்வேன்” என்றும் தெரிவித்தார்.

ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, முதல் ஆளாக திருப்தி தேசாய் தலைமையில் செல்வோம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வுமனு தாக்கல் செய்ய இருப்பதாக கேரள தேவசம்போர்டு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.