தாமஸ் குக் இந்தியா நிறுவனம் பிரிட்டன் நிறுவனம் அல்ல : புதிய தகவல்

டில்லி

ந்தியாவில் உள்ள தாமஸ் குக் நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ள பிரிட்டன்  சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் நிறுவனத்தை சேர்ந்தது  அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் பிரபல சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக  அறிவிக்கப்பட்டு திடீரென மூடப்பட்டுள்ளது.  இதனால் உலகெங்கும் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.  அத்துடன் இந்த நிறுவனங்களில் பணி புரியும் 22000 ஊழியர்கள் பணி இழந்துள்ளனர்.  இந்த நிறுவனத்துக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன.

இந்தியாவில் இயங்கி வரும் தாமஸ் குக் இந்தியா என்னும் நிறுவனம் சுற்றுலா சேவையுடன் அந்நிய செலாவணி, நிறுவனப் பயணம், விடுமுறைப்பயணம், உள்ளிட்ட  பல சேவைகளைச் செய்து வருகிறது.  ஆசிய பசிபிக் பகுதிகளில் உள்ள பல நாடுகளின் இந்த நிறுவனத்தின் கிளைகள் அமைந்துள்ளன.   தற்போது பிரிட்டனின் தாமஸ் குக் நிறுவனம் திவாலாகி மூடப்பட்டுள்ளதால் இந்த நிறுவனமும் பாதிப்பு அடைந்திருக்கும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தாமஸ் குக் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த நிறுவனம் ஏற்கனவே கடந்த 2012 ஆகஸ்ட் முதல் பிரிட்டன் நிறுவனத்தில் இருந்து பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளது.   அப்போது இந்நிறுவனத்தின்  77% பங்குகளைக் கனடாவை சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங் என்னும் நிறுவனம் வாங்கி உள்ளதாகவும்  அந்த நிறுவனத்தின் கீழ் தாமஸ் குக் இந்தியா நடந்து வருகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.