ராகுல் காந்தியின் குறைந்த வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உதவ முன் வந்தது ஏன்?: பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி விளக்கம்

புதுடெல்லி:

இந்தியாவில் மேல்தட்டு மக்களால் ஏழைகள் மோசமாக நடத்தப்படுவதாலேயே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்துக்கு உதவ முன்வந்ததாக, பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை அமல்படுத்துவோம் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.

இதனையடுத்து, இந்த திட்டத்துக்கு உதவ நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஆங்கஸ் டியோட்டன் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியோரின் உதவியை நாடியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

எனினும், தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என ஆங்கஸ் டியோட்டன் தெரிவித்தார்.

இது குறித்து தாமஸ் பிக்கெட்டி கூறும்போது, இந்தியாவில் மேல்தட்டு மக்களால் ஏழைகள் மோசமாக நடத்தப்படுகின்றனர். இதனாலேயே காங்கிரஸ் கட்சிக்கு உதவ முன்வந்தேன். இதற்கு எவ்வளவு செலவாகும், எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடனும் அபிஜித் பானர்ஜியுடனும் பகிர்ந்து கொள்வேன் என்றார்.