தூத்துக்குடி:

குற்றவழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை பெற்று சுமார் 17 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை முடித்து விடுதலையான எலக்ட்ரிஷியன் ஒருவருக்கு  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி,  எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைக்க உதவி செய்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மேலவள்ளமடம் பகுதியை சேர்ந்த வேதமணி என்பவர் கடந்த 17 ஆண்டு களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை வாசம் பெற்றார்.  தற்போது 57 வயதில் சிறையில் இருந்து  அவர் விடுதலையான நிலையில், கடினமான வேலை களுக்கு செல்ல முடியாத நிலையில், தான் ஏதாவது தொழில் தொடங்க உதவிகோரி   தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தார்.

மாவட்ட கலெக்டர் அவரிடம், புதிய தொழில்முனைவோர் திட்டம் அல்லது பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் லோனுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேதமணிக்கு அறிவுறுத்தினார். அவரும் மனு செய்தார். ஆனால், அவரது மனுவை ஆயவு செய்த அதிகாரிகள் அவருக்கு லோன் கொடுக்க முடியாது என்று கைவிரித்தனர்.

இதனால் மனம் தளராத வேதமணி மீண்டும் ஆட்சியரை சந்தித்து உதவி கோரினார். இதை யடுத்து,  வேதமனி சிறப்பான எலக்ரிஷியன் என்பது தெரிய வந்ததால்,  கலெக்டர் தன் சுயவிருப்ப நிதியிலிருந்து 1 லட்சம் ஒதுக்கி வேதமணி எலக்ட்ரிக் கடை வைக்க உதவினார்.

இதன் காரணமாக வேதமணி  தற்போது புதிய  எலக்ட்ரிக் கடைக்கு உரிமையாளராக ஆகியுள்ளார். அவரது புதிய கடையை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி  கடந்த 16-ஆம் தேதி தொடங்கி வைத்து வாழ்த்தினார்.