தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம்

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் தமிழக அரசு வழங்கி உள்ளது.

கடந்த மே மாதம்  22ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு சார்பில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த  ஆணையம் ஏற்கனவே விசாரணையை தொடங்கி விசாரித்து வருகிறது.

இந்த விசாரணைக்கு ஆணையத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசம் முடிவடைவதால், மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.