தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்திய சம்பவம் குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இன்று  விசாரணை நடத்தி வருகிறது.

தூத்துக்குடியில் கடந்த மே)13ந்தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய  பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராட்டித் தனமான  துப்பாக்கிச் சூடு குறித்து ஏற்கனவே மனித உரிமைகள் கழகம் மற்றும் பல சமூக அமைப்புகள் விசாரணை நடத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து  சிபிஐ விசாரணை கோரிய மனுவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், விசாரணையை தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன்,  மாவட்ட ஆட்சியர்  சந்திப் நந்துரி, காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தினர்.