தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சுட உத்தரவிட்ட 3 வட்டாட்சியர்களை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை:

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, காவலர்களை துப்பாக்கியால் சுட உத்தரவிட்டதாக கூறப்படும் 3  துணை தாசில்தார்களையும்  எதிர் மனுதாரராக சேர்க்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த மே 22ம் தேதி ஸ்டெர்லைட்  தாமிர ஆலைக்கு எதிரான பொதுமக்கள் பேரணியின்போது, காவல்களின் கண்மூடித்தமான துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வழக்கறிஞர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வர்கள் மீது முறையான அனுமதி இல்லாமல் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக  தமிழகத் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி, தென்மண்டல ஐஜி, திருநெல்வேலி டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், சிப்காட் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பஷிர் அகமது அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை யின்போது, பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட காவலர்களுக்கு அனுமதி வழங்கியதாக கூறப்பட்டுள்ள 3  துணை தாசில்தார்களை எதிர்மனுதார்களாக  சேர்க்க  மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அப்போது, அளவுக்கு அதிகமாகப் போராட்டக்காரர்களின் கூட்டம் இருந்ததால் அவர்களின் அருகில் காவல்துறை யினர் நெருங்க முடியவில்லை என்றும், தொலைவில் இருந்து தான் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த  துப்பாக்கிச் சூடு துரதிருஷ்டவசமானது என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்று கூறினர்.

பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட  கண்ணன், சேகர், சந்திரன் ஆகிய மூன்று துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளதால் அவர்கள் மூவரையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவும் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Thoothukudi Gunfire: Court orders to add 3 Sub-Tahsildar as the respondent, தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தலைமை செயலகத்தில் பாரதிராஜா உள்ளிருப்பு போராட்டம்
-=-