தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்: தமிழக அரசு

சென்னை:

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறையை தொடர்ந்து போலீசார் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில், பள்ளி மாணவி உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு சார்பில் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

அதில்,  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, ஆலை எதிர்ப்புக் குழு மற்றும் சில அமைப்புகள் சார்பில், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவு செய்து சுமார் 20 ஆயிரம் பேர் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள்   வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு  தீயிட்டும், அலுவலகத்தையும் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தியதாகவும்  கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தினரின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டதாகவும்,  சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, கூடுதலாக காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அரசு சட்டபூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும் என்றும், இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.