Random image

சோபியாவின் பாஸ்போர்ட்டை  காவல்துறையினர் திரும்ப அளித்தனர்

தூத்துக்குடி ஆராய்ச்சி படிப்பு மாணவி சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை அவரது தந்தையிடம் புதுக்கோட்டை காவல்நிலைய  காவலர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.

நெல்லையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க. விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து  தூத்துக்குடிக்கு விமானத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை பயணித்தார். கனடாவில் பி.எச்டி. மேற்கொண்டு வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற மாணவியும் அதே விமானத்தில்  பயணம் செய்தார்.

விமானத்தில், தமிழிசையை கண்ட சோபியா,  அவரை நோக்கி கைகளை உயர்த்தி,  “பாசிச பா.ஜ.க.,ஒழிக” என்று முழக்கம்  எழுப்பினார். தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியதும் அப் பெண்ணுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பெண்ணின் மீது தமிழிசை செளந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் (தூத்துக்குடி) புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 15 நாள்கள் ஷோபியாவை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. .

இந்த நிலையில், ஜாமீன் கோரி ஷோபியா மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷோபியாவுக்கு  நிபந்தனையற்ற ஜாமீன் அளித்தது.

இந்த வழக்கின் முதல் நாள் விசாரணையின்போது, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சோபியாவிடம் இருந்து பாஸ்போர்ட்டை போலீஸார் பெற்றுக்கொண்டனர். ஆனால், அது காலாவதியான பாஸ்போர்ட் என்பதால், 7-ம் தேதி, காலை 10 மணிக்கு புதிய செல்லத்தக்க பாஸ்போர்ட் உடன் சோபியா மற்றும் அவரின் தந்தை ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டு சோபியாவின் தந்தை சாமியிடம் சம்மன் வழங்கப்பட்டது.

இது குறித்து சோபியாவின் வழக்கறிஞர் அதிசயகுமார், “விசாரணை செய்ய மட்டுமே காவல்துறையினருக்கு அதிகாரம் உண்டு. பாஸ்போர்ட்டை கேட்பதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது.   அசல் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாட்டோம். பாஸ்போர்ட்டை முடக்கி, ஷோபியாவை மீண்டும் கனடா செல்லவிடாமல் நிரந்தரமாக தடுப்பதற்கான முயற்சிதான் இது. இதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.

இந்த நிலையில் சோபியாவின் பழைய பாஸ்போர்ட்டை அவரது தந்தையிடம் புதுக்கோட்டை காவல்நிலைய  காவலர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.

 

You may have missed