தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு!

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்  குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்த வழக்கு 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த விசாரணையின்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து, சிபிஐ விசாரணை நடத்தினால் சரியாக இருக்கும் என்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்த நிலையில், தற்போது 2 வாரத்திற்கு வழக்கை தள்ளி வைத்து உள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மாதம் (மே) 13ந்தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய  பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராட்டித் தனமான  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயத்துடன் சிகிச்சை பெற்றனர். பலருக்கு கால், கைகள் அகற்றப்பட்டுள்ளன.

மனதை பதபதைக்க வைத்த இந்த சம்பவம்   குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கிடையில், துப்பாக்கிசூடு விவகாரம் குறித்து விசாரணை நடத்த  ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதசீனை தமிழக அரசு நியமனம் செய்தது. அவரும் தற்போது அங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இநத நிலையில்,  சிபிஐ விசாரணை கோரி  வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில்  துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? எத்தனை பேர் உயிரிழந்தனர்? துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களுக்கும் தலா 1கோடி ரூபாய் இழப்பீடு வழங்க  உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 18ந்தேதி நடைபெற்றது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக  சிபிஐ விசாரணை செய்வது சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தது.மேலும்,  தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்கவும்  சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி சம்பவம் தொடர்பான  சில வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைப்பதாக அறிவித்து உள்ளது.