டில்லி

பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவுகளை அதிகம் பகிர்வோருக்கு மட்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளதாக தி பிரிண்ட் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் முதல் இரு கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்து இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. இதில் பாஜக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் களத்தில் உள்ள வேட்பாளர்களில் பலர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாதவர்கள் ஆவார்கள்.

ஆங்கில செய்தி ஊடகமான தி பிரிண்ட் வெளியிட்டுள்ள செய்தியில், “தற்போது சமூக தளங்களில் புகழ் பெற்ற பாஜகவினருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பாஜக விரும்புகிறது. மோடி ஒரு முறை ஒவ்வொரு பாஜக பாராளுமன்ற உறுப்பினரும் குறைந்தது 3 லட்சம் ஃபாலோயர்களை டிவிட்டரில் பெற முயற்சி செய்யவேண்டும் என கூறி உள்ளார். அதை ஒட்டி தற்போது மக்களவை உறுப்பினர்களாக உள்ள டிவிட்டர் கணக்குகளை பார்வை இட்டோம்.

அதில் முக்கியமாக பாஜகவினரின் டிவிட்டர் பதிவுகளை பகிர்வோர் அதிகம் உள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை பகிர்வோர் பெருமளவில் உள்ளனர். இவர்களில் மோடியின் பதிவுகளை அதிகம் பகிரும் மக்களவை உறுப்பினர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி மூன்று லட்சத்துக்கு மேல் ஃபாலோயர்களை பெற்ற ஒரு சிலருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு காரணம் என்ன என அவர்கள் கணக்கை பார்வை இட்ட போது அவர்கள் மோடியின் டிவிட்டர் பதிவுகளை மிகவும் குறைவான அளவில் பகிர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வில் சமூக வலை தளங்கள் முக்கிய இடம் வகித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலை தளங்களில் பிரபலமாக உள்ளவர்களை விட பிரதமர் மோடிக்கு விசுவாசமாக அவரது பதிவுகளை பகிர்பவர்களுக்கு வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் தெரிய வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.