ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை சகிக்க முடியாதவர்கள் நிலவுக்குச் செல்லுங்கள் : பாஜக தலைவர்

திருவனந்தபுரம்

ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை சகிக்க முடியாதவர்கள் நிலவுக்குச் செல்லலாம் என கேரள பாஜக  தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

                                                   அடூர் கோபாலகிருஷ்ணன்

நாட்டில் பெருகி வரும் கும்பல் கொலைக்கு எதிராக பிரதமருக்கு 49 கலைஞர்கள்  கூட்டறிக்கை ஒன்றை கடிதமாக அனுப்பி உள்ளனர்.  அவர்களில் கேரள திரையுலக பிரபலமான இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனும் ஒருவர் ஆவார்.  இவர் பல மலையாளப்படங்களை இயக்கியவர் ஆவார்.   இவர் மத்திய அரசின் விருதுகளைப் பெற்றவர் ஆவார்.

பாஜக கோபாலகிருஷ்ணன்

கேரள மாநில பாஜக தலைவரும் செய்தி தொடர்பாளருமான பி கோபாலகிருஷ்ணன் இது குறித்து, “பிரபல திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனால் ஜெய்ஸ்ரீராம் கோஷத்தைச் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால் அவர் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு சென்று தனது பெயரை பதிந்து நிலவுக்குச் சென்று அங்கே வாழலாம்” என தெரிவித்துள்ளார்.   பாஜக தலைவரின் கருத்து சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பல மலையாள திரையுலக பிரமுகர்கள் பாஜக தலைவர் கோபாலகிருஷ்ணனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.     அடூர் கோபாலகிருஷ்ணன் தாம் பயணச்சீட்டு கிடைத்தால் நிலவுக்குச் செல்ல தயாராக உள்ளதாக கூறி உள்ளார். மேலும் அவர் தமது அறிக்கை ஜெய்ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிரானது அல்ல எனவும் அந்த கோஷத்திற்காக நடைபெறும் கும்பல் கொலைகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள மற்றொரு நடிகரான கௌஷிக் சென், “நேற்று எனக்கு ஒரு அறிமுகமில்லாத நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர் நான் கும்பல் கொலைக்கும் சகிப்புத் தன்மை இல்லாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தால் கொல்லப்படுவேன் என மிரட்டினார்.” என தெரிவித்துள்ளார்.