எனது தோட்ட மாம்பழம் சாப்பிட்டால் மகன் பிறப்பான் : இந்துத்வா தலைவர்

நாசிக்

காராஷ்டிராவை சேர்ந்த சர்ச்சைக்குரிய இந்துத்வா தலைவர் சாம்பாஜி பிடே தனது தோட்ட மாம்பழ்த்தை சாப்பிட்டவர்களுக்கு மகன் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள பீமா கோரேகான் என்னும் ஊரை சேர்ந்தவர் இந்துத்வா தலைவர் சாம்பாஜி பிடே.    கடந்த ஜனவரி மாதம் இந்தப் பகுதியில் 1818ஆம் வருடம் நடந்த போரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.   இந்தப் போரில் இந்த பகுதியில் உள்ள தலித்துகள் பேஷ்வாக்கள் எனப்படும் உயர்சாதி இந்துக்களை வென்றுள்ளனர்.

அதைக் கொண்டாடும் வகையில் நடந்த இந்த விழாவில் வன்முறை நிகழ்த்தியதாக சாம்பாஜி பிடே மற்றும் மற்றொரு இந்துத்வா தலைவரான மிலிந்த் ஏக்போடே இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.   தற்போது ஜாமீனில் வந்துள்ள சாம்பாஜி பிடே நாக்பூரில் ஒரு விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது சாம்பாஜி, “மாம்பழங்கள் என்பது சுவையானவை மட்டும் அல்ல.  சக்தி ஊட்டுபவையும் ஆகும்.   என்னுடைய தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தை சாப்பிட்ட பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் மகன்கள் பிறந்துள்ளனர்.   மாம்பழங்கள் குறித்து ஏற்கனவே ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.