80 சதவிகிதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தகுதி கிடையாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை:

பிளஸ்-2 தேர்வில் 80 சதவிகிதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தகுதி கிடையாது, அவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று  சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

இது  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புவர்கள் நீட் தேர்வு மூலமே தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான பணக்காரர்கள் தங்களது பிள்ளைகளை பணம் செலவழிப்பது குறித்து கண்டுகொள்ளாமல்.. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வைத்து வருகின்றனர்.

இதன் காரணமாக குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் பணம் கொடுத்து வெளிநாடுகளில் மருத்துவர் பட்டம் பெற்று விடுகின்றனர்.

இதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில்,  வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் தாக்கல் செய்துள்ள விளக்கத்தில்,, நீட் தேர்வில் தேர்ச்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில்,  பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நமது நாட்டில் 90 சதவீத  மதிப்பெண்கள் பெற்ற மாணவரால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலையில், வெளிநாட்டு கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண்களை 80 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று  நீதிபதி உத்தரவிட்டார்.