சென்னை: தமிழகத்தில் ரூ.2500 பணமுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இன்று (18ந்தேதி) முதல் வரும் 25ந்தேதி வரை நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள  அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு  வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு (2020) டிசம்பர்  20-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார். இதற்காக ரூ.5 ஆயிரத்து 604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் கடந்த 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.  ‘தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு மற்றும் துணிப்பை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இதுவரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்காதவர்கள், இன்றுமுதல் வரும் 25ந்தேதி வரை வாங்கிக்கொள்ளலாம் என  தமிழக அரசு அறிவித்து உள்ளது.