பாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுபவர் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் : பாஜக அமைச்சர் பேச்சு

புனே

பாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுபவர் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் என மத்திய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.

மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   நாடெங்கும் கடும் போராட்டங்கள் நடைபெறுவதால் பல இடங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.    கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத் திருத்தத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளன.

நேற்று முன் தினம் புனேவில் ஆர் எஸ் எஸ் மாணவர் இயக்கமான ஏபிவிபி நிகழ்வு ஒன்று நடந்தது.  ஏ பி வி பி அமைப்பின் 54 ஆம் மாவட்ட மாநாடான இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துக் கொண்டார்.

அவர் தனது உரையில், “குடியுரிமை சட்டத் திருத்தம், மற்றும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அவர்கள் இந்த நாட்டை தர்ம சத்திரமாக மாற்ற விரும்புகின்றனரா?

பகத் சிங் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலர் நாட்டுக்குச் செய்த தியாகங்களை வீணாக்குவதா?   பல தியாகிகள் சுதந்திரத்துக்காகப் போராடியதை 70 வருடங்களுக்குப் பிறகு நாம் வேற்று நாட்டவருக்குக் குடியுரிமை அளிக்கவா?  இவ்வாறு செய்வதால் நமது நாடு ஒரு தர்ம சத்திரமாக மாறி விடாதா?

நாம் இந்த விவகாரத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.  நமது எண்ணத்தைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.  பாரத தேச மக்கள் பாரத மாதாவுக்கு ஜெய் என கூற வேண்டும்.  அவ்வாறு கூறுபவர்கள் மட்டுமே இங்கு வசிக்க முடியும்” எனக் கூறி உள்ளார்.