ராணுவ நடவடிக்கையை சந்தேகிப்பவர் அனைவரும் பாகிஸ்தானிகள் : குஜராத் முதல்வர்

கமதாபாத்

ராணுவத்தினர் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்டு  ஆதாரம் கேட்பவர் அனைவரும் பாகிஸ்தானிகள் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில பாஜகவினர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாஜகவினரின் உரைகள் மேலும் மேலும் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. சமீபத்தில் வகோடியா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மது ஸ்ரீவத்ஸா மற்றும் பாவ் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜிது வகானி ஆகியோர் பிரசாரக் கூட்டத்தில் பேசியது மாநிலத்தில் பலரின் எதிர்ப்பை பெற்றுள்ளது.

வகோடியா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மது ஸ்ரீவத்ஸா ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போது வாக்காளர்களிடம், “நீங்கள் பாஜகவுக்கு அவசியம் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காவிடில் அதற்கான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும்” என மிரட்டும் தோரணையில் பேசி உள்ளார். அவருக்கு நேற்று முன் தினம் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினரான ஜிது வகானி தனது சூரத் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரசாரை இந்தியில் ஹராம்ஜாதே (தவறான முறையில் பிறந்தவர்கள்) என திட்டி உள்ளார். இத்தகைய ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்துவதை பாஜகவினரே பல இடங்களில் கண்டித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று குஜராத் மாநில பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த குஜராத் முதல்வர் விஜய் ருபானி இவர்கள் இருவரும் செய்தது தவறு என கூறி உள்ளார். ஆனால் அவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து ஏதும் சொல்லவில்லை. அதே நேரத்தில் அவர் தொடர்ந்து பேசிய சில வார்த்தைகள் அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

விஜய் ரூபானி, “தற்போது நடைபெறும் மக்களவை தேர்தல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெறும் தேர்தல் ஆகும். நமது ராணுவ நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட பாகிஸ்தான் நம்மிடம் ஆதாரம் கேட்கிறது. காங்கிரஸும் அதே ஆதாரத்தை கேட்கிறது. எனவே பாகிஸ்தானும் காங்கிரசும் ஒன்று என நான் கருதுகிறேன்.

நமது ராணுவ வீரர்கள் மீதும் ராணுவ நடவடிக்கைகள் மீதும் யார் சந்தேகப்பட்டாலும் அவர்கள் பாகிஸ்தானிகள் ஆவார்கள். இது நம் நாட்டில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட் எதிர்கட்சிகளுக்கும் புல்வாமா தாக்குதலில் உயிர் துறந்த வீரர்களின் குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் பொருந்தும்” என தெரிவித்து அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.