ஆடிப்பூரம்: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்    

ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் விளங்குவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில்.

இக்கோயிலில் உள்ள பெரிய கோபுரம், தேர், குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. பெரியாழ்வார் பாடிய கோயில் என்ற பெருமையும் இத்திருத்தலத்துக்கு உண்டு.

இங்கு வருடம்தோறும்ஆடி மாதத்தில் திருவிழா நடக்கும்.  அதன்படி இந்த வருடத்துக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆண்டாள் அவதரித்த தினமான ஆடிப்பூரம் அன்று தேரோட்டம் விமரிசையாக நடக்கும்.
இதன்படி 11ஆம் தேதி இரவு 7 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவத்தில் அருள்பாலித்தார். இந்த திருக்கோலத்தை தரிசித்தால், தம்பதியரிடையே பிணக்குகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.

பிறகு நேற்று மதுரை அழகர்கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் இருந்து பிரசாதமாக கொண்டு வரப்பட்ட பரிவட்டங்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டன.  முக்கிய முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 7.20 மணிக்கு துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் எங்கும் ஒலித்தது.  ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் நாளான  நாளை மாலை 5 மணிக்கு  ஆண்டாள்-ரங்கமன்னார் புறப்பாடு நடைபெறும்.   மறுநாள் ஆண்டாள் – ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்ப யாகத்துடன் விழா நிறைவடைகிறது.

திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது  ஐதீகம்.
மேலும் குழந்தைபேறு இல்லாதவர்கள்  ஆடிப்பூரம் தினமான இன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு அனைத்து பாக்கியங்களும் உடனே கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

 

கார்ட்டூன் கேலரி