ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் – முஸ்லீம் இளைஞர் வாக்குமூலம்

பீகார்:
ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் என்று பீகாரை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் ஒருவர் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், படுகாயமடைந்த இஸ்ரேலை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பீகாரை சேர்ந்தவர் முகமத் இஸ்ரேல். இவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து விளக்கினார். அதில், சம்பவத்தன்று, தான் வசித்து வரும் சம்பரன் கிராமத்தில், மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. எனது மொபைலில் சார்ஜ் இல்லாததால், சார்ஜ் செய்ய எனது நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன் என்றார்.

இதுகுறித்து மேஷி காவல் நிலைய பொறுப்பாளர் அவினாஷ் குமார் தெரிவிக்கையில், இந்த சம்பவம் ஜூன் 2 அன்று நடந்துள்ளது. எங்களுக்கு புகார் வந்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம் என்றார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய இஸ்ரேலின் சகோதரர், எனது சகோதரனின், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது,. இதனால், அவனால் பேசவே முடியவில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எனது சகோதரனை தாக்கிய நபர்கள், அவன் மயங்கி கிடந்தை, இறந்து விட்டதாக எண்ணி விட்டு சென்றுள்ளனர். மோஷி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எனது சகோதரனின் நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அங்கிருந்த மருத்துவர்கள் அவனை சிகிச்சைக்காக முசாபர்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

முஸ்லீம் இளைஞரான இஸ்ரேல்-ஐ தாக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோபால், ராகுல் பன்வரிலால், லாகான், பிரின்ஸ், அபிஷேக் மற்றும் நிதிஷ் சிங் ஆகிய 6 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பதனா கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இவர்கள் யாரையும் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வீர்-பிரின்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் நடக்கும் போது நாங்கள் அந்த இடத்திலேயே இல்லை. இந்த பிரச்சினை வேண்டுமென்றே மதம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அந்த முஸ்லீம் இளைஞர் தனது பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அவரை யார் அடித்து காயப்படுத்தியது என்று எங்களுக்கு தெரியாது என்றும் கூறினார்.

நீங்கள் எந்த அமைப்புடன் தொடர்பு கொண்டவரா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தான் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவன் என்று பிரின்ஸ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மோஷி கிரமாத்தின் பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் கோலு கிலானி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்கள் மீது வேண்டுமேன்றே வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார்.