முதல்வர், போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல்……கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு

சென்னை:

ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனுக்கு மிரட்டல் விடுத்து பேசிய கருணாஸ் மீது கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகரும் எம்எல்ஏ.வுமான கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின்பேரில் தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் உத்தரவின்பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் ஆத்திரமடைந்த கருணாஸ் வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை கமிஷனர் அரவிந்தன் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.

கருணாஸின் இந்த மிரட்டல் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் கருணாஸ் மிரட்டும் வகையில் பேசியது குறித்து நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் கருணாஸ் மீது கொலைமுயற்சி, கொலை மிரட்டல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தூண்டும் வகையில் பேசுவது, தனது கருத்தின் மூலம் பொது மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் நடப்பது, பொதுமக்களுக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்துவது, உள் நோக்கத்துடன் மாற்று சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் எதிராகப் பேசுவது, உருவாக்குவது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு ஏப்ரல் மாதம் ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கும் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போராட்டத்தில் இரண்டு சம்பவங்களின் போது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 9-வது குற்றவாளியாக கருணாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: threaten speech against Chief Minister and police officer attempt murder case filed against Karunas, போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல்......கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு, முதல்வர்
-=-