கொலை மிரட்டல்..  வீட்டுக்குச் செல்ல மாட்டேன்!: தீபா கணவர் மாதவன்

சென்னை:

ன் மீதான கொலை மிரட்டல் புகார் குறித்த நடவடிக்கை என்னவென்று அறியாமல், தனது வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் கூறியிருக்கிறார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு இவர் தனிக் கட்சி துவங்கினார். பிறகு இவரது கணவர் மாதவனும் தனிக்கட்சி துவங்கினார்.

இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. வீட்டில் இருந்து மாதவனை, தீபா வெளியேற்றினார். இதற்கிடையே போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தின் வெளியே மாதவனுக்கும், தீபாவின் கார் டிரைவர் ராஜாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

இந்த நிலையில் தீபா மாதவன் இருவரும் மீண்டும் இணைந்தனர். இருவரும் மீண்டும் தி.நகர் இல்லத்தில் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர்.

தீபா – மாதவன்

இந்த நிலையில் ராஜா மீது, மாம்பலம் காவல் நிலையத்தில் கொலைமிரட்டல் புகார் அளித்தார் மாதவன்.

அதில் அவர், “நான் தி.நகர் சிவஞானம் தெருவில் மனைவி தீபாவுடன் வசிக்கிறேன். இந்நிலையில், கண்ணமாபேட்டை பஜனை கோயில் தெருவில் வசிக்கும் ராஜா என் மனைவியின் தம்பி தீபக்கின் நண்பர்.

இவர் வீட்டிற்கு வந்த போது பாதுகாவலர்கள் அனுமதிக்க வில்லை. இதனால் வீட்டில் வேலை செய்யும் சுந்தர், சிவா, எனது நண்பர் சண்முகம் ஆகியோரை ராஜா தாக்கி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவும் ராஜா வீட்டில் வேலை செய்யும் சுந்தர், சிவா, ஜெரோம் ஆகியோரிடம் தகராறு செய்ததுடன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, மாம்பலம் போலீசில் புகார் அளித்துள்ளேன். எனவே, என்னை ராஜாவிடம் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று  புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

போயஸ் கார்டனில் தீபா முன் மாதவனை கடுமையாக ராஜா பேசும் காட்சி

பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாதவன், “ தீபா அவர்கள் ராஜா மீது எந்த தவறும் இல்லை  என்று இப்போது கூறுகிறார். இது எனக்கு  வியப்பளிக்கிறது.  இது பற்றி தீபா விடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

போயஸ் தோட்டத்தில் ராஜா நடந்துகொண்ட முறையை அனைவரும் அறிவார்கள்.  அதன் தொடர்ச்சியே இந்த கொலை மிரட்டல்.

நான் தொடர்ந்து தனி கட்சியாக செயல் படுகிறேன், என் கட்சியில் ஐந்து பேரவைகள் உள்ளன, இந்த பேரவைக்கு ஆசைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விசயத்தில் தெளிவு பிறக்கும் வரை டி.நகர் வீட்டிற்கு செல்வதாக இல்ல” என்று மாதவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.