மிரட்டும் கோரோனா வைரஸ்: சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானம் தயார்!

பீஜிங்:

சீனாவை மிரட்டி வரும் உயிர்க்கொல்லி வைரசான கோரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 81 பேர் இறந்த நிலையில், உலக நாடுகளும் பீதியடைந்து உள்ளன.  இந்தியாவில் உஷார் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள கூறப்படுகிறது.

சீனாவில் எல்லைப்பகுதிகளில் உள்ள மாநிலங்களில் கடுமையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர்இந்தியா விமானம் தயாராக இருப்பதாக இந்திய அரசு தெரிவித்து உள்ளது.

சீனாவில் பரவி வரும் கோரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளிலும் தனது ஆக்டோபஸ் கால்களை விரித்து கபளீகரம் செய்ய முயன்று வருகிறது. அனைத்து நாடுகளும் கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள சில பயணிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

கேரளா, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 4 பேர் உள்பட கொல்கத்தா வந்த சீன பெண்ணுக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல சீனாவில் இருந்து நேபாளம் திரும்பிய ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கோரோனா வைரஸ்   ஒருவரிடம் இருந்து  மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், நேபாள எல்லையில் இருந்து  வருபவர்கள் தீவிரமாக பரிசேதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பரவி வரும் இந்த வரஸ் பாதிப்புக்கு தாய்லாந்தில் 7 பேரும், ஜப்பானில் 3, தென் கொரியாவில் 3,  அமெரிக்காவில் 3, வியட்நாமில் 2, சிங்கப்பூரில் 4, மலேசியாவில் 3,  நேபாளத்தில் 1, பிரான்சில் 3, ஆஸ்திரேலியாவில் 4 பேர், கம்போடியாவில் 1 என வெளிநாடுகளில்  மொத்தம் 32 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, சீனாவில் சிக்கி உள்ள தங்களது நாட்டவர்களை திருப்பி அழைத்து வர உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, வுகான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள், தங்களை  மீட்டுச்செல்லும்படி இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில், கேரள முதல்வரும் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

சீனாவில், சுமார் 23ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் உள்பட பல்வேறு வகையான படிப்புகள் படித்து வருவதாகவும், அவர்களை அழைத்து இந்தியா அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவு அமைச்சகம் செய்து வருகிறது. இதற்காக சீன அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், சீனா அனுமதி வழங்கியவுடன், அங்குள்ள இந்தியவர்கள் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக  போயிங் 747 விமானம் தயாராக உள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

இதுவரை சீனாவில் இருந்து இந்தியா திரும்பியுள்ளவர்களுக்கு தீவிர பரிசோதனை விமான நிலையத்திலேயே நடைபெற்று வருவதாகவும்,  இதுவரை கேரளாவைச் சேர்ந்த 288 பேர் சீனாவில் இருந்து திரும்பி உள்ளதாகவும்,  கர்நாடக மாநிலத்தில் 2,572 பேர் திரும்பியுள்ளதாகவும் அவர்களிடம் கொரோனா வரைஸ் பரிசோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.