டாஸ்மாக் கடையில் மாற்றப்பட்ட கள்ள நோட்டு : மூவர் கைது

சென்னை

சென்னை மாதவரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த முத்து என்பவர் மூலக்கடை டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வந்தார்.  நேற்று மாலை ஒரு வாலிபர் ரூ.500 கொடுத்து மது வாங்கி உள்ளார்.   அவர் கொடுத்த நோட்டு கள்ள நோட்டு என தெரிந்ததால் முத்து மாதவரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

மதுக்கடைக்கு விறைந்து வந்த காவல்துறையினர்  அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்துக்கு கூட்டி சென்று விசாரணை நடத்தினர்.   விசாரணையில் அவர் முட்டை தூக்கும் தொழிலாளி சுப்ரமணி என்னும் 28 வயது வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.  சுப்ரமணிக்கு பனம் தேவைப்பட்டதால் மாதவரம் பகுதியில் உள்ள ஹசீனா பேகம் என்பவரிடம் கடன் கேட்டுள்ளார்.

ஹசீனா பேகம் தனது உறவினரான சாகுல் ஹமீது என்பவரிடம் ரு.10 ஆயிரம் கடன் வாங்கி சுப்ரமணிக்கு கொடுத்துள்ளார்.  அதில் இருந்த ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்து சுப்ரமணி மது வாங்கி உள்ளார்.    தகவல் அறிந்த காவல்துறையினர் ஹசீனா பேகம் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளன்ர.

அப்போது சாகுல் ஹமீது ஆட்டோ ஓட்டி வந்ததும் அவர் விபத்தில் காயமடைந்ததால் பணம் இல்லாமல் கள்ள நோட்டு அடிக்க முடிவு செய்ததும் தெரிய வந்துள்ளது.   தாம் அடித்த கள்ள நோட்டுக்களில் ரூ. 10000 மதிப்புள்ள நோட்டுக்களை அவர் ஹசீனா பேகம் மூலம் சுப்ரமணிக்கு கடன் கொடுத்துள்ளார்.  அந்த பணத்தை மாற்றும் போது சுப்ரமணி மாட்டிக் கொண்டுள்ளார்

தற்போது காவல்துறையின ஹசீனா பேகம், சாகுல் ஹமீது மற்றும் சுப்ரமணி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.