சென்னை: ரஜினிகாந்த், தான் அறிவித்துள்ள ஆன்மிக அரசியலுக்கான  கட்சியை ஜனவரியில் தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த நிலையில், கட்சியை தொடங்க 3 தேதிகளை அவர் இறுதி செய்துள்ளார். இதில் ஏதாவது ஒரு நாளில், அவர் தனது கட்சி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என நம்பப்படுகிறது.

அரசியல் கட்சி தொடங்கப்போவதாக டிசம்பர் 3 ம் தேதி அறிவித்துள்ள ரஜினிகாந்த்,  தேதி குறித்த முறையான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும்  கூறியிருந்தார். தொடர்ந்து,  கட்சியின் மேற்பார்வையாளராக  தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு நபர்களுடன் ரஜினி ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த்,  அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் தொடர்பாக அறிவிக்க 3 தேதிகளை இறுதி செய்துள்ளதாக போயஸ் கார்டன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி,  ஜனவரி 14, 17, 21 தேதிகளில், ஏதாவது ஒரு தேதியில் ரஜினி தனது கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 14ந்தேதி தை மாதத்தின் முதல் நாள் – அதாவது  பொங்கல் தினம். அன்றைய தினம் தமிழர்கள், குறிப்பாக இந்துக்களின் மத்தியில் மிகவும் பிரசித்திப் பெற்ற  நாள். மறறும் விவசாயிகளின்  அறுவடைத் திருநாள் என்பதும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

ஜனவரி 17, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள். தமிழக மக்களிடையே இன்றளவும் புகழ்பெற்றுள்ள தலைவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். இன்றளவும் அவரை தெய்வமாக வணங்கி வருபவர்கள் ஏராளமானோர். அதனால்தான், கமல் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும், எம்.ஜி.ஆரை சுட்டிக்காட்டி தேர்தல் பிரசாரம் செய்து, அவரது, வாக்கு வங்கிகளை பறிக்க முயற்சித்து வருகின்றன.

ஜனவரி 21,  அன்றைய தினம் ரஜினியின் ராசியான எண் 3 வருவதுடன், வியாழக்கிழமையாகவும் உள்ளது. ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரஜினிக்கு ராகவேந்திரர் மீது தனி பற்று உண்டு. அதன் காரணமாக அவருக்கு உகந்தநாளான வியாழக்கிழமையாகவும் இருப்பதால், ரஜினி இந்த நாளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த 3 நாட்களில் ஏதாவது ஒருநாளை, கட்சி தொடங்குவதற்கான தேதி குறித்த முறையான அறிவிப்பாக டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 21ந்தேதி கட்சி பெயரை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்?