திருப்பதி

கீழ் திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூன்று தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன.

கீழ் திருப்பதியில் அமைந்துள்ளது கோவிந்தராஜ சாமி கோவில். பக்தர்கள் இங்கு தரிசனம் செய்து விட்டே மலை ஏறுவது வழக்கமாகும். இந்த கோவிலில் ஆயிரக்கணககான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்வதால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். அதுவும் விசேஷ தினங்களில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.

இந்த கோவிலில் சாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு அணிவிக்க மூன்று தங்க கிரீடங்கள் உள்ளன. இந்த கிரீடங்களில் வைரம் மற்றும் வைடூரியக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. திருவிழா காலங்களில் இந்த கிரீடம் மற்றும் நகைகள் அணிவிக்கப்பட்டு சாமி மற்றும்தேவியர் உலா வருவர். சாமி வீதி உலா முடிந்ததும் நகைகள் மீண்டும் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்படும்.

தினமும் இரவு தேவஸ்தான அதிகாரிகள் நகைகளை சரிபார்ப்பது வழக்கம். அவ்வாறு சரி பார்க்கும் போது இந்த 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இந்த கிரீடங்கள் சுமார் 1.4 கிலோ எடை உள்ளவைகள் ஆகும். அரசர் கிருஷ்ணதேவராயரால் வழங்கப்பட்ட இந்த கீரிடங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.

இதை ஒட்டி காவல்துறையினர் கோவில் அர்ச்சகர்கள் மூன்று பேரிடமும், ஊழியர்கள் சிலரிடமும் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறது. பாதுகாப்பு கோவிலில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் விசாரணை இது வரை முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.