கேரளாவில் அதிசயம் : பாம்பு முட்டைகளை பாதுகாத்து பாம்புக் குட்டிகள் வெளிவர உதவிய மூவர்

கொட்டியூர், கேரளா

ராஜநாகத்தின் முட்டைகளை ஒரு வனவிலங்கு மூவர் கொண்ட குழு பாதுகாத்து குஞ்சு பொறிக்க வைத்துள்ளனர்.

இந்த வருடம் ஏப்ரல் மாத இறுதியில் வனவிலங்கு புகைப்படக்காரர் மற்றும் தன்னார்வ தொண்டரான விஜய் நீலகண்டனுக்கு கேரளாவின் கண்னனூர் மாவட்டத்தில் உள்ள கொட்டியூரிலிருந்து தொலைபேசியில்,  அங்குள்ள முந்திரி தோப்பில் ஒரு ராஜநாகம் தென்பட்டதாகவும், உடனே வருமாறும் அழைப்பு வந்தது,  அவர் அங்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்தும் பாம்பு அவர் கண்ணில் படவில்லை.

பிறகு மே மாதம் வன இலாகா அவசர உதவி கழக உறுப்பினர் சந்திரன் அவர்களுக்கு உதவ அங்கு சென்றிருந்தார்  வனத்துறை அதிகாரி மாத்யூஸ் உடன் அவர் சோதனையில் ஈடுபட்ட போது ஒரு ராஜநாகத்தின் கூட்டைக் கண்டார்.  அதே போல ஒரு கூட்டை அங்குள்ள கிராமவாசிகள் எரித்து விட்டதாக முன்பே சொல்லி இருந்தனர்.  மூவரும் அந்தக்கூட்டை ஆராயந்ததில் 20-30 முட்டைகள் அந்தக் கூட்டினுள் இருந்தன.

முட்டையிட்ட அந்த ராஜநாகம் அந்த இடத்தை விட்டு சென்று விட்டது.  சாதாரணமாக ராஜநாகக் குட்டிகள் முட்டையை விட்டு வெளியே வர 100 நாட்கள் வரை ஆகும்.  ஏப்ரல் கடைசி வாரம் அந்த முட்டைகளை ராஜநாகம் இட்டிருந்தாலும், எப்படியும் ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான் முட்டையை விட்டு பாம்புக்குட்டிகள் வரும்.  ஆகையால் அந்த முட்டைகளை பாதுகாக்க மூவரும் தீர்மானித்தனர்.

அந்தப் பாம்பின் கூடு இலைகள் மற்றும் குச்சியை வைத்துக் கட்டப்பட்டிருந்தது.  ஒரு மரத்தின் நிழலில் இருந்த அந்தக் கூடு எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு துளி மழை நீர் கூட உள்ளே வராதபடி கட்டப்பட்டிருந்தது.  பாம்பை இந்த கிராம வாசிகள் பார்த்ததாக சொன்ன சமயத்தில் தான் இந்த கூட்டை கட்டி அதில் பாம்பு தன் முட்டைகளை இட்டுள்ளது.

அந்த முட்டைகளை பாதுகாப்பதில் அடுத்த முயற்சி அந்த கிராமவாசிகளை சம்மதிக்க வைப்பதாக இருந்தது.  அதை விட வனத்துறை அதிகாரி மாத்யூஸ் சம்மதத்தை பெறுவது மற்ற இருவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை.  ஒரு வழியாக அனைவரும் சம்மதத்தையும் பெற்றனர்.  அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக பாவித்து தினமும் குறைந்த 7- 9 மணிநேரம் காவல் காத்தனர்.  அது தவிர பாதுகாப்பு காமிராவும் பொருத்தப்பட்டது.

தினமும் அந்த இடத்தின் ஈரப்பதம், மழை அளவு மற்றும் வெப்ப நிலை அளக்கப்பட்டது.  தேவைப்பட்டால் வேறு இடத்துக்கு முட்டைகளை மாற்றத் தேவையான ஆயத்தங்களுடன் இருந்தனர்.  ஆனால் அந்த முட்டைகளை யாரும் தொடாமல் பார்த்துக் கொண்டனர்.  எந்த விதமான பூஞ்சைக் காளான் போன்றவை முட்டையின் மேல் படராமல் கவனித்து வந்தனர்.

விஜய் தனது நண்பரும் ராஜநாகங்களை பற்றி நன்கு அறிந்தவருமான கௌரிசங்கரை வரவழைத்தார்.  அவரும் தினம் முட்டைகளை பார்வையிட்டு வந்தார்.  அந்த தாய் நாகம் அருகில் இருந்திருந்தால் கூட இந்த அளவு கவனித்திருக்குமா என்பது சந்தேகமே.

கௌரிசங்கர் – விஜய் நீலகண்டன்

மேலும், 75 நாட்களானதும் 24 மணி நேரமும் பாதுகாக்க ஆரம்பித்தனர். எந்த நிமிடமும் முட்டைகளிலிருந்து பாம்புக் குட்டிகள் வரலாம் என காத்திருந்தனர்.  அந்த முட்டைகளில் இருந்து பாம்புக்குட்டிகள் வந்த போது இந்த மூவர் மட்டும் அல்ல, அந்த கிராமவாசிகள் அனைவருமே ஒரு வித ஆர்வத்துடன் இருந்தனர்.  கிராமவாசிகள் சுமார் 25 பாம்புக்குட்டிகள் பிறந்ததாக சொல்லிய போதிலும் விஜய் மொத்த பாம்புக் குட்டிகளின் எண்ணிக்கையை வெளியிட மறுத்து விட்டார்.  இது ரகசியமாக இருக்கும் வரை மக்களின் மனதில் தேவையற்ற பயம் இருக்காது என்பது அவர் கருத்து.  பிறந்த பாம்புக் குட்டிகள் பத்திரமாக காட்டினுள் விடப்பட்டன.

இது போல மனிதர்களால் பாதுகாக்கப்பட்டு பாம்பு முட்டைகள் குஞ்சு பொறிக்கப்படுவது கேரள வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்

நன்றி : The News Minute and Vijay Neelakantan