தும்கூர்,

ர்நாடக மாநில முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான உறைவிடப்பள்ளியில் 3 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

புட் பாய்சன் காரணமாக அவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் சிக்கநாயக்கண்ண ஹல்லி பகுதியில் வித்ய வரிதி இன்டர்நேஷனல் போர்டிங் ஸ்கூல் எனப்படும் உறைவிடப் பள்ளி செயல்படுகிறது.

அங்கு ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அங்கு நேற்று உணவருந்திய மாணவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்த மூர்த்தி, ஆகன்ஷா மற்றும் ஸ்ரேயாஸ் ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் ஒருவர் கர்நாடக மாநில சட்டஅமைச்சர் டி.பி.ஜெயச்சந்திராவின் உறவினர் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு மாணவருக்கும், பாதுகாவலர் ஒருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் சாவு காரணமாக அந்த பள்ளியின் உரிமையாளர், கிரண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பாரதியஜனதா எம்எல்ஏ ஆவார்.

மாணவர்கள் இறந்த செய்தி கேட்டு அவர்களின் பெற்றோர் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இறந்த மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சத்தை பதற வைத்தது.

உணவில் விஷம் பரவியது எப்படி? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 மாணவர்களின் மரண செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக டிவிட்டரில் கூறியுள்ள அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் குறிப்பிட்டார்.