டெல்லி:

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  டெல்லி சிறப்பு காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1998ம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டனர். இடையில் சில ஆண்டுகள் இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்ட நிலையில், மீண்டும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவானவர்கள் ஆதிக்கம் வளரத் தொடங்கி உள்ளது.

டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள்

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில்  ஆன்மிக நபர்கள் சிலர் கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பும், அதில் ஈடுபட்ட பலர் தமிழகத்தில் பயிற்சி பெற்று சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து, தேசிய புலனாய்வு படையினர் தமிழகத்தில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இதன் காரணமாக, கோவை உள்டப பல மாவட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய நிலையில், 33 பேர் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை ஐஜி அலோக் மிட்டல்  தெரிவித்திருந்தார்.

இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவானர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.  இந்த நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும், தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் டெல்லியில்,  டெல்லி மாநில சிறப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டெல்லியில் ஜனவரி 26ந்தேதி குடியரசு தினம் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமாக 3 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தியதில், அவர்கள் 3 பேரும்  ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.

தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், காஜா மொய்தீன், அப்துல் சமது ஆகிய 2 பேரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சையது அலி நவாஸ் என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் 2 பேர்  ஏற்கனவே இந்து முன்னணி தலைவர் கே.பி.சுரேஷ்குமார் கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டு, ஜாமின் வெளியே வந்தவர்கள் என்றும், டெல்லியில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முயற்சி மேற்கொண்டதாகவும், பின்னர் நேபாளம் வழியாக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.