புதுகை: மூன்று வயது குழந்தை கழுத்தை அறுத்துக் கொலை!  

புதுக்கோட்டை அருகே மூன்று வயது குழந்தை கழுத்தை அறுத்து கொல்லப்பட்டுக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நரபலியாக இருக்குமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை டுத்த குரும்பட்டி என்ற கிராமத்தைச் சேர;ந்த வெள்ளைச்சாமி, முருகாயி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஷாலினி.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஷாலினி, காட்டுப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாள். தகவல் அறிந்த குடும்பத்தினர் பதறியடித்துச் சென்று பார்த்தனர். பிணமாகக் கிடந்த குழந்தை ஷாலினியைப் பார்த்து கதறினர்.

இது குறித்து ஷாலினியின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது:

“ஷாலினிதான் எங்கள் குடும்பத்துக்கே செல்லக் குழந்தை. மூன்று வயதுதான் ஆகிறது. இன்னும் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை.

ஷாலினியின் பெரியம்மா ராதிகா அருகிலேயே வசிக்கிறார். அவரது வீட்டுக்கு கடந்த 25.10.2018 அன்று மாலை ஷாலினி சென்று ”மிட்டாய் வாங்க வேண்டும் காசு கொடுட என்று கேட்டாள். அவரும் கொடுக்க, கடைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு ஷாலினி சென்றாள்.  ஆனால் அதன் பிறகு அவள் வீட்டுக்கு வரவில்லை. ஆகவே அக்கம்பக்கத்தில் தேடினோம். அப்போதுதான் ஆடு மேய்க்கும் உள்ளூர்க்காரர், காட்டுப்பகுதியில் குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடக்கிறாள் என்று பதறியபடியே தெரிவித்தார். அதிர்ந்துபோன நாங்கள் அங்கு ஓடினோம்” என்று குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.

தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் உடலை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரணை நடந்தவருகிறது.