பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் சென்னை வந்தார்!

சென்னை,

மிழகத்தில் நிலவும்  பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு  ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.

தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்ட டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் அதிரடி யாக பதவி நீக்கம் செய்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்றே தமிழகம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசனை செய்ததை தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.

இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.