கோரிக்கைகளை கேட்காத மந்திரிகள் மீது வெங்காயத்தை தூக்கி அடியுங்கள்: ராஜ்தாக்கரே

மும்பை:

கோரிக்கைகளை கேட்காத அமைச்சர்கள் மீது வெங்காயத்தை தூக்கி அடியுங்கள் என்று விவசாயிகளிடம் பேசிய  நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திளது.

வடமாநிலங்களில் வெங்காய விலைச்சல் அதிகம் காரணமாக, வரலாறு காணாத விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பெரும் நஷ்டத்தில் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், அதுகுறித்து மத்தியஅரசு கிஞ்சித்தும் கவலைப்படுவதாக தெரிய வில்லை.

பெரும் நஷ்டம் காரணமாக ஓரிரு விவசாயிகள் தற்கொலை முடிவை நாடியுள்ள நிலையில், விவசாயி ஒருவர் தன்னிடம் இருந்த 750 வெங்காயத்தை கிலோ ஒன்றுக்கு 1.41 என்ற விலையில் விற்பனை செய்து, அதன்மூலம் கிடைத்த பண மான  ரூ.1064ஐ பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

இதன் மூலமாகவாது விவசாயிகளின் கஷ்டம் பிரதமருக்கு தெரிய வரும் என்ற நோக்கில் அவர் அனுப்பிய பணத்தை திருப்பிய அனுப்பிய பிரதமர் அலுவலக அதிகாரிகள், அதை வங்கி மூலம் செலுத்தும்படி அறிவிறுத்தி இருந்தனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மோடிக்கு விவசாயிகள் குறித்து அக்கறை இல்லை என்பதை நிரூபணமாகி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், வெங்காயம் அதிகம் விளையும் நாசிக் மாவட்டத்தில் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சுற்றுப்பயணம் செய்தார்.

அப்போது, அங்குள்ள கல்வான் பகுதியில் வெங்காய விவசாயிகள் மத்தியில் அவர் பேசும்போது,  உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மந்திரிகள் மீது வெங்காயத்தை தூக்கி வீசுங்கள் என்று கூறினார்.

ராஜ்தாக்கரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளிடையே வன்முறையை தூண்டும் விதமாக ராஜ்தாக்கரே பேசி உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.