டில்லி

ப்லிகி நிகழ்வைப் போல் போலி செய்திகள் பரவாமல் தடுக்க மத்திய அரசு விதிகள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது

நாட்டில் கொரோனா பரவல் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் டில்லியில் உள்ள தப்லிகி ஜமாத் என்னும் இஸ்லாமிய அமைப்பினர் கூட்டம் ஒன்றை நடத்தினர்.  அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் அதில் கலந்துக் கொண்டனர்.  அதன் பிறகு அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றனர்.  இதனால் கொரோனா பரவல் நாடெங்கும் அதிகரித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.   இதனால் இஸ்லாமிய மக்கள் மிகவும் மனவருத்தம் அடைந்தனர்.

இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்பான ஜாமியத் உலாம இ இந்த் என்னும் அமைப்பு ஒரு வழக்கைத் தொடர்ந்தது.   அந்த வழக்கு மனுவில் ஊடகங்களின் இந்த செய்தியால் தப்லிகி ஜமாத் கூட்டத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கியதாகவும் இது போன்ற போலிச் செய்திகள் பரவாமல் தடுக்க டிவி சட்டத்தின் கீழ் மத்திய அரசு விதிகள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம், “மத்திய அரசு போலி செய்திகள் பரவாமல் தடுக்க தேவையான விதிகளை அமைக்க வேண்டும்.  தற்போதைய கேபிள் டிவி கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் இதை அமைக்க முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.   அத்துடன் இது குறித்து மத்திய அரசு கடந்த 3 வாரங்களாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டது.

அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இது குறித்து நடவடிக்கைஅக்ள் எடுக்க அரசிடம் அதிகாரங்கள் நிறைய உள்ளதாகவும் ஆனால் இது பேச்சுரிமைக்கு எதிரானது எனத் திருப்பப்படும் என்பதால் அரசு எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் பதில் அளித்தார்.

உச்சநீதிமன்றம், “டிவி சேனல்கள் மூலம் பரப்பப்படும் போலி செய்திகளால் உண்டாகும் துயரங்களைக் களைய இப்போது எந்த விதிகளும் இல்லையெனில் மத்திய அரசு தேவையான விதிகளை இயற்ற வேண்டும்.    தற்போது டிவிகளில் காட்டப்படும் செய்திகளால் மிகவும் கடுமையான விளைவுகள் உண்டாகி வருகின்றன.   இது குறித்து அரசின் விளக்கங்களுக்காக இந்த வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.” என உத்தரவிட்டுள்ளது.