(முந்தைய பகுதியின் தொடர்ச்சியாக பேசுகிறார் விசிட்டர் அனந்து..)

ன்னொரு இதழுன் இணைந்து “கிண்டல்” இதழை நடத்த அணுகினேன் என்றேன் அல்லவா?

அந்த இதழ்.. “குமுதம்”!

ஆம்.. குமுதம் நிறுவனத்தோடு இணைந்து அந்த இதழைக்கொண்டு வருவது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ‘அரசியலை விமர்சித்து ஆபத்தை விலைக்கு வாங்குவானேன்…?’ என்றொரு தயக்கமும் அன்றைய நிர்வாகத்திற்கு இருந்தது. எனவே கைவிட்டனர்.

இதில் குமுதத்தின் நிருபர் ‘பால்யூ’ எனக்கு அறிமுகமானார். அவர் ஒரு நாள் ‘துக்ளக்’ சோவிடம் உங்களைப்பற்றி பேசினேன். அவர் ரொம்ப ஆர்வம் காட்டினார். நீங்கள் துக்ளக்கில் பணியாற்ற விருப்பமா? ஏனெனில் உங்களைப் போன்றவர் அவருக்கு ஒரு நல்ல பக்க பலமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது என்றார்.

எனக்கும் இதழியல் பயணத்தை இடையிலேயே விட்டுவிட மனமில்லை. என் மனம் முழுவதும் ஜர்னலிசமே ஆக்கிரமித்திருந்தது. எனவே துக்ளக்கில் பணியாற்றுவதில் ஆட்சேபணை இல்லை என்றேன். பால்யூ என்னை சோவிடம் அறிமுகப்புடுத்திய அந்தக்கனமே ‘உங்கள் பணி இப்போதே உடனே இங்கே ஆரம்பமாகட்டும்’ என்றார்.

அனந்து

அப்போது சோ சார் சினிமா, நாடகம், அரசியல் என மிகப் பிசியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். நான் அங்கே சேர்ந்ததும் கொஞ்சம் முன் அனுபவமும், தீவிர ஆர்வமும் இருந்ததால் சகல வேலைகளையும் இழுத்து போட்டு இரவு பகலாக வேலைபார்த்தேன். என்னை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு ஒரு உதவியாளரையும் கொடுத்தார். நல்ல சுதந்திரமாகச் செயல்படும் சூழலையும் உருவாக்கி தந்தார்.

மாநகராட்சி தொடங்கி அரசின் ஒவ்வொரு துறைகளிலும் ‘விசிட்’ அடித்து மக்களின் பிரச்சினைகள், அதை அதிகாரவர்க்கம் அணுகும்விதம் பற்றி  விசிட்டர் என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன். இது தமிழ் இதழியலுக்கு அன்று புதிது.

எனவே ஒவ்வொரு இதழ் வெளிவரும் போதும் அப்படி ஒரு அதிர்வு ஏற்படும். துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் எதிர்வினை ஆற்றுவார்கள். அன்றைய முதல்வர் கருணாநிதியும் என் கட்டுரைகளுக்கு அடிக்கடி எதிர்வினையாற்றுவார்.

துக்ளக்கின் தலைமை நிருபராக மட்டுமின்றி துணை ஆசிரியர் பொறுப்பையும் சேர்த்தே செய்தேன். சோ சார் சூட்டிங், டிராமா, மீட்டிங் என்று போய் கொண்டிருப்பார். இதனால் கட்டுரைகளை எடிட்டிங் செய்வது, பேஜ்மேக்கிங்கிற்காக பிளாக் எடுப்பது, கார்டூன் ஐடியாக்களை  கார்டுனிஸ்டுகளுக்கு சொல்லி வேலைவாங்குவது, மற்றவர்களிடமிருந்து படைப்புகளை பெறுவது… என சகல வேலைகளையும் ஆர்வம் இருந்ததால் ஈடுபாட்டோடு செய்தேன். சில சமயங்களில் அவருடைய தலையங்கத்தை கூட எடிட்டிங் செய்யவேண்டியிருக்கும். இதற்காக சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கேட்க முடியாது என்பதால் அவருடைய எண்ணவோட்டம் என்னவென்று எனக்கு புரியுமாதலால் நானே எடிட்டிங் செய்து விடுவேன். ஒரே ஒரு முறை மட்டும், “இதை எடிட்டிங் செய்வதற்கு முன்னால் என்னிடம் கேட்டிருக்கலாமே” என்றார்!

“துக்ளக்: விழாவில் சோ – அனந்து

இந்திராகாந்தி எமர்ஜென்ஸி கொண்டு வந்தார். அப்போது பத்திரிகைகள் சந்தித்த இன்னல்கள் குறித்து தனிபுத்தகங்கள் கொண்டுவந்தேன்.

அந்த இக்கட்டான சூழலில் வட இந்தியாவிற்கு பயணப் பட்டு காந்தியவாதி ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டங்களை கூடவே இருந்து பதிவு செய்தேன். அந்த அனுபவங்களை தொகுத்தும் ஒரு தனிபுத்தகம் கொண்டுவந்தேன்.

அப்போது துக்ளக், மாதம் இருமுறை வெளியாகும். இதுபோல மாதமிருமுறை இதழில் ஒரு பத்திரிகையாளன் ஓரளவே பதிவு செய்யமுடியும். அதுவும் சில வரையறைகளுக்கு உட்பட்டுத்தான்!

எனவே நடந்து கொண்டிருக்கும் வரலாற்று சம்பவங்களின் நேரடி அனுபவங்களை கண்டவன், கேட்டவன், அனுபவித்தவன் என்ற வகையில் முழுமையாக பதிவு செய்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் உதவும் என்றே நான் தனிப்பட்ட வகையில் நான்கு புத்தகங்கள் கொண்டுவந்தேன். இவற்றை சொந்த செலவில் அச்சிட்டு ரூபாய் 2 மற்றும் 3 விலையில் மலிவு பதிப்பாக வெளியிட்டேன். சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அந்த நூல்கள் தற்போது மறுபதிப்பு பெற்றால் இந்த தலைமுறையினருக்கு அது சில வித்தியாச அனுபவங்களையும், இன்றைய அரசியல் போக்குகள் பற்றிய புரிதல்களையும் தரும்.

இவையாவும் காலத்தின் தேவையாக அமைந்த செயல்பாடுகள். துக்ளக்கில் வெளியான எழுத்துகள், என்னுடைய கள வேலைகள், புத்தக வெளியீடுகள்… போன்றவற்றால் நான் பெரும் முக்கியத்துவமான அடையாளமாக உருவாவதாகவும், அது வருங்காலத்தில் உங்களுக்கு இடையூராக முடியலாம் என்றும் சிலர் ‘சோ’விடம் ‘கோள்’  சொல்லத் தொடங்கினார்கள். ஆனந்தவிகடன் நிர்வாகத்திற்கும் உங்களுக்கும் முரண்பாடு தோன்றினால் அவர்கள் உங்களை தவிர்த்து அனந்துவை ஆசிரியராகக் கொண்டு கூட துக்ளக் வெளிக்கொண்டு வரக்கூடும் என்றும் வத்தி வைத்தார்கள்.

சோசார் என்னிடம் மிகவும் அன்னியோன்யமாகப் பழகுவார். நண்பனைப் போல் ‘டிக்டேட்’ பண்ணுவார். சமயங்களில் என் டெஸ்கில் உட்கார்ந்து டிராயரைத் திறந்து என் சிகரெட் ஒன்றை உரிமையாக எடுத்து பற்ற வைத்தவாறே பேசுவார். அவ்வளவு இயல்பானவர். ஆசிரியர் என்ற பந்தாவெல்லாம் இல்லாமல் சக ஊழியரைப்போல பழகும் பண்புள்ளவர். ஒரு நாள் எங்களுடைய பேச்சில் அவரது சந்தேகம் வெளிப்பட்டது. உடனே, ” உங்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்படமாட்டேன்” என தெளிவுபடுத்திவிட்டேன்.

ஆனால், அவரது அணுகுமுறைகளில் சில வித்தியாசங்கள் வெளிப்படத் தொடங்கின. ‘துக்ளக்’ என்றால் அது ‘சோ’ என்ற ஒற்றை மனிதனின் பிம்பம் என்பதாக மட்டுமே மக்கள் மனதில் நிலைபெறவேண்டும்…. என்ற குவிமையத்தில் அவர் இயங்கத்தொடங்கினார். எனவே ஜர்னலிசத்தின் சகல பரிமாணத்தோடு  செயல்பட்டுக் கொண்டிருக்கும் என் போன்ற ஒருவனுக்கு இந்தக் களம் போதாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை பேட்டி காணும் அனந்து

1980 ல் விசிட்டர் என்ற பெயரில்  ஒரு முழுமையான அரசியல் இதழை கொண்டு வந்தேன். அது மிக நல்ல வரவேற்பு பெற்றது. கருணாநிதி, எம்.ஜி.ஆர் தொடங்கி இந்திராகாந்தி உள்ளிட்ட வட இந்திய தலைவர்களையும் நேரடியாக பேட்டிகண்டு எழுதினேன். அன்று இளம் பத்திரிகையாளர்களாக வளர்ந்து கொண்டிருந்த ஞாநி, மாலன் போன்றவர்களுக்கும் எழுத வாய்ப்பளித்தேன். அதனுடைய வீச்சும் எழுச்சியும் சிறப்பாகவே இருந்தது.

துக்ளக்கிலிருந்து நான் வெளிவந்து விசிட்டர் நடத்திய நேரத்தில் கல்கண்டில் ஒரு கேள்வி – பதில் பகுதியிலும், தினமணி கதிரிலும் என்னை குறித்து எழுதியிருந்தார்கள்.  “குருவை மிஞ்சிவிட்டாரா சிஷ்யர்’? என்ற கேள்விக்கு, “யாருக்கு யார் குரு? அனந்துவுக்கு சோ குருவா? சோவுக்கு அனந்து குருவா? அனந்து துக்ளக்கிற்கு முன்பே பத்திரிகை ஆசிரியராயிற்றே” என்ற பதில் வெளியாகியிருந்தது.

“ஆசிரியர் சாவியைப்போல விசிட்டர் அனந்துவும் தன் பெயராலேயே பத்திரிகை  கொண்டுவந்துள்ளார். விசிட்டருக்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது” என்ற தொனியில் எழுதப்பட்டது.

இதையெல்லாம் சோ சார் ரசிக்கவில்லை. அவர் மனம் புண்பட்டது என அறியவந்தேன். இதனால் விரும்பத்தக்காத அனுபவங்கள் சில ஏற்பட்டன.

என்னுடைய துர் அதிர்ஷ்டம் நல்ல பத்திரிகை முதலாளி அமையவில்லை எனவே 70 ஆயிரம் பிரதிகள் விற்ற நிலையில் நிர்வாக பிரச்சினை காரணமாக விசிட்டர் நின்றுவிட்டது.

ஆனால், இதன் தாக்கமோ என்னமோ விசிட்டர் இதழ் நின்றுபோன சில மாதங்களிலேயே ஜூனியர்விகடன் வெளியானது. ஜூனியர்விகடனைத் தொடர்ந்து தராசு, நக்கீரன் என அடுத்தடுத்து புலான்ய்வு இதழ்கள் பல்கி பெருகின.

அந்த  பத்திரிகையும்  முதலாளியின் நிர்வாக குளறுபடியால் நின்றுபோனது.

பிற்பாடு கேசட் வடிவில்  ‘வானவில்’ என்ற ஒரு வீடியோ இதழை 1988ல் செவன்த் சேனல் நாராயணன், புகைப்பட நிபுணர் சுபா.சுந்தரம் ஆகியவற்களோடு சேர்ந்து கொண்டுவந்தோம்.  அது மூன்று இதழ்களுக்கு பிறகு பொருளாதார நெருக்கடியால் நின்றுவிட்டது. ஆனால், அதன் தாக்கத்தால் மாறன் சகோதரர்கள் ‘பூமாலை’ என்றொரு வீடியோ மேகசினை கொண்டுவந்தனர். சன்டிவி தொடங்குவதற்கு பூமாலை தான் அடித்தளமிட்டது” என்றார்.

ஒரு பத்திரிகையாளன் எவ்வளவு எழுத்தாற்றல் மிக்கவனாக இருந்தாலும், எவ்வளவு தொழில் அனுபவம் இருந்தாலும் அவனுக்கு நல்ல நிர்வாகத்தின் ஆதரவோ அல்லது சொந்த பணபலமோ இல்லை என்றால் ஒரு இதழை தொடர்ந்து வெற்றிகரமாக கொண்டுவருவதென்பது இயலாது என்பதே நிதர்சனம்!

சந்திப்பு: சாவித்திரி கண்ணன்

(மூத்த பத்திரிகையாளர் சாவித்திரிகண்ணன்  அனந்துவின், “விசிட்டர்” இதழில் செய்தியாளராகவும் புகைப்படக்காரராகவும் பணி புரிந்தவர். துக்ளக் இதழில் நீண்டகாலம் பணிபுரிந்தவர்.)