சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், அதிமுக பாஜ கூட்டணிக்கு இடையே முட்டல் மோதல் நடைபெற்று வருகிறது. மோடி தலைமையிலான அமைச்சரவையிலும், அதிமுகவுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அதிமுக பாஜக மீது அதிருப்தி கொண்டுள்ளது.

இந்த நிலையில்,  ஓபிஎஸ் மற்றும் அவரது மகனை  பிச்சைக்காரனாக சித்தரித்து ‘துக்ளக்’ கார்டூன் வெளியிட்டுள்ளது  அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், அதற்கு பதிலாக தலையங்கம் தீட்டியுள்ள  அதிமுகவின் அதிகாரப் பூர்வ நாளிதழான நமது அம்மாவில், பாஜகவை கடிந்துகொள்ளக்கூட தெம்பில்லாமல்,  துக்ளக் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக மென்மையாக தெரிவித்து உள்ளது.

தேர்தல் முடிவுக்கு பிறகு, பாஜக உறுப்பினர் குருமூர்த்தி அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட் டுக்களை கூறிய நிலையில், அவரது துக்ளக் பத்திரிகையிலும் கடுமையாக விமர்சிக்கப்பபட்டு வருகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக படுதோல்வியை அடைந்த நிலையில், அதிமுகமீது அதிருப்தியில் உள்ள பாஜக, குரு மூர்த்தியை  கொண்டு அதிமுகவை கடுமையாக சாடி வருகிறது.

மோடி அமைச்சரவை மீண்டும் பதவி ஏற்ற நிலையில், அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த் நிலையில், அதிமுகவுக்கு அல்வா கொடுத்தார் அமித்ஷா. ஆனால், எப்படியும் அமைச்சர் பதவி பெற்றுவிடலாம் என ஓபிஎஸ், தனது மகனுடன் டில்லியில் முகாமிட்ட நிலையிலும், அதிமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிமுகவுக்கு, அமைச்சரவையில் பிரதிநிதித்தும் கிடைக்காத  நிலையில், துக்ளக் பத்திரிகை வெளியிட்ட ஒரு கார்டூன் அதிமுகவினரை கடுமையாக கோபமடைய வைத்துள்ளது.

அந்த கார்டூனில், பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு அறைக்குள் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அந்த அறைக்கு வெளியே  நின்று ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத்தும்  வேடிக்கை பார்ப்பது போலவும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. அதனுடன்   உஸ்ஸ்… யாரும் அழப்படாது…நம்பளையெல்லாம் உள்ளே  கூப்பிட மாட்டாங்க…  கடைசியா ஏதாவது மீந்துச்சுனா குடுப்பாங்க.. அப்ப சாப்பிடலாம்…  என்று  அதிமுக அமைச்சர் பதவி கேட்டு டில்லியில் காந்து கிடந்ததை கடுமையாகவும், கேலவமாகவும் சித்தரித்து உள்ளது. மேலும் சில கார்ட்டூன்கள் வெளியிட்டு, அதிமுகவை கடுமையாக சாடி உள்ளது.

இந்த கார்ட்டூன்களுக்கு முக்கிய காரணம், துக்ளக் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியரான குருமூர்த்தி என்று குற்றம் சாட்டப்படுகிறது. தமிழக மக்களிடையே சர்ச்சைகளை கொளுத்திப் போட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடும் குருமூர்த்தி, தற்போது அதிமுகவை நேரடியாக சீண்டி உள்ளார்.   குருமூர்த்தியின் அதிமுக மீதான  தாக்குதலுக்கு பாஜக தலைமை பின்புலமாக உள்ளதாக சந்தேகிகப்படுகிறது.  தேர்தலின்போது, ‘தேர்தல் வரை குருமூர்த்தியின் உக்கிரமான முகம் தெரியாத நிலையில், பாஜக தோல்வியை தொடர்ந்து அவரது உண்மையான முகத்தை காண்பிக்க தொடங்கி உள்ளார்.

கார்ட்டூனில் அதிமுகவை பிச்சைக்காரர்ளாக பாவித்து, படம் வரையப்பட்டுள்ளது, அதிமுக வினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மக்களால் ஒதுக்கித்தள்ளப்பட்ட  ஒரு கட்சியை தோளில் தூக்கிச்சென்ற அதிமுவுக்கு இதுதேவைதான் என்று மாற்று கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில், குரூமுர்த்தியின் கார்டூன் குறித்து தலையங்கம் தீட்டி உள்ளது.

அதில், பாரதிய ஜனதா கட்சியை விமர்சிக்கக்கூட தெம்பில்லாத நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக கண்டனம் தெரிவித்து உள்ளது.

மேலும் இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு கழக சிப்பாய்கள் செவிமடுக்காமல் கடந்து போவது ஒன்றே அவர்களுக்கு நாம் தரும் பதில் என்று தெரிவித்து உள்ளது.